(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய திருமலை கப்பல் கட்டலைத் தளபதியுமான ரியர் அத்மிரால் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிக்கு செல்லும்போது  கடத்தப்பட்டு உடைமைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர்  கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவர் கைதுசெய்யப்படவுள்ளார்.

கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக நம்பப்படும் குறித்த இரு தமிழர்களுக்குமென்ன  நடந்தது என்பது தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதிகளான  அத்மிரால் வசந்த கரன்னாகொட, அத்மிரால் ஜயந்த பெரேரா ஆகியோரும் அறிந்திருந்துள்ளதாகவும், அவர்களும் அச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்  கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு  அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.