இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்தாலும் சர்வதேச அரங்கில் இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அதிலிருந்து விலகிச்செல்ல முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- ஜெனீவாவில் நடைபெற்ற 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும் செயற்பாட்டை முக்கியமானதொரு விடயமாக பார்க்கின்றோம். இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படாது இருந்திருந்தால் பத்துவருடங்களாக பொறுப்புக்கூறலை செய்வதற்கு பின்னடித்து வரும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடமிருந்து தப்பி பிழைத்திருக்கும். ஆனால் பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் ஊடாக இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட 30/1 மற்றும் 34/1 ஆகிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது மீண்டும்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலும் இரண்டு வருடங்கள் சர்வதேசத்தின் மேற்பார்வைக்குள் இலங்கை அரசாங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு இலங்கை அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கலாம்.

ஆனாலும் பொறுப்புக்கூறலுக்கான விடயத்திற்காக இலங்கை அரசாங்கம் கையொப்பம் இட்டுள்ளதால் அதிலிருந்து விலக முடியாது.

கேள்வி:- பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையை திருத்தங்களின்றி நிறைவேற்றுவதில் உலகத்தமிழர் பேரவையின் வகிபாகம் என்ன?

பதில்:- எமது அமைப்பின் தலைவர் எஸ்.ஜே.இம்மானுவேல் தலைமையில் பொதுச்சபையின் உதவி செயலாளர் நாயகம், நோர்வே அரச பிரதிநிதி, அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். இதன்போது இலங்கை மீது புதிய பிரேரணையையொன்றை கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்ற தருணத்தில் நாமும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்து அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கும் பிரத்தியேக கூட்டத்தில் 28 நாடுகளைச் சந்தித்திருந்தோம்.

மாற்றங்களின்றி பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினோம். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக முக்கியஸ்தர்களையும் சந்தித்து இந்த விடயத்தினை உறுதியாக கூறினோம். இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்ட தருணத்தில் நாங்கள் அனைத்தையும் பகிரங்கப்படுத்தியிருக்கவில்லை. ஆனாலும் தற்போது பிரேரணை திருத்தங்களின்றி நிறைவேறியுள்ள நிலையில் அதனை வெளிப்படுத்தியுள்ளேன். விடயங்களை பகிரங்கப்படுத்துவதிலும், செயற்பாட்டு ரீதியான வெற்றியை பெறுவதே முக்கியமானது.

கேள்வி:- இலங்கைக்கு சர்வதேச மேற்பார்வைக்கான காலம் வழங்குவதற்கு அதிகமான புலம்பெயர் அமைப்புக்கள் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளமை தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- புலம்பெயர் அமைப்புக்களில்; சிலர் இத்தகையை கருத்தினைக் கொண்டிருந்தார்கள். அதுவும்

முக்கியமானதொரு விடயமாகின்றது. ஏனென்றால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், மனித உரிமைகள் பேரவை, சர்வதேச நாடுகளுக்கு வித்தியாசமான அழுத்தமொன்றையே வழங்குவதாக இருக்கின்றது. ஆகவே நியாயமான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும் என்று ஒருதரப்பு கோருகின்ற அதேநேரம் இவ்வாறு இறுக்கான விடயங்களை முன்வைத்து செயற்படும் அமைப்புக்களினது செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலம் சேர்ப்பதாகவே அமைக்கின்றது.

கேள்வி:- சர்வதேச மேற்பார்வை வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலிருந்த புலம்பெயர் அமைப்புக்களுக்கும், உலகத்தமிழர் பேரவைக்கும் இடையில் நிறைவேற்றப்பட்ட தற்போதைய பிரேரணை குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தனவா?

பதில்:- ஆம், பல்வேறு திறந்த மற்றும் மூடிய சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. இலங்கை மீதான புதிய பிரேரணை குறித்து அனைத்து அமைப்புக்களும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்திருந்தன. அதன்போது, இலங்கைக்கு சர்வதேச மேற்பார்வைக்கான காலம் வழங்ககூடாது, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

அனைத்து அமைப்புக்களும் ஏக நிலைப்பாடுகளை கொண்டிருக்கவில்லை. அவ்வாறான நிலைமையானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலுச்சேர்ப்பதாக இருக்கும் என்றே நாம் கருதினோம்.

கேள்வி:- பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றன. குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிக சொற்ப அளவிலேயே செயற்பட்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே தான் இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூறலுக்கான அழுத்தங்கள் தற்போது அதிகரித்துள்ளன.

கேள்வி:- பொறுப்புக்கூறல் விடயத்தில் மந்தகதியில் இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட காலம் வழங்குவதால் முன்னேற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

பதில்:- இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகள் என்ன செய்தோம் என்பதை சர்வதேசத்திற்கு கூறவேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இரண்டு வருடகாலம் வழங்கப்படாது விட்டிருந்தால் பத்தாண்டுகளாக மெதுவாக செயற்பட்டு வரும் அரசாங்கம் இத்துடன் பொறுப்புக்கூறலுக்கான விடயங்களை கைவிட்டிருப்பார்கள். ஆனால் தற்போது அவர்களால் அவ்வாறு செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கேள்வி:- இலங்கை அரசாங்கம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை பகிரங்கமாக நிராகரித்துள்ள நிலையில் பொறுப்புக்கூறல் விடயங்களை அடுத்துவருகின்ற காலப்பகுதியில் முன்னேற்றகரமாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

பதில்:- வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பதாக கூறிவிட்டு பிரித்தானியா தலைமையிலான பிரேரணை நிறைவேறுவதற்கு இணை அனுசரணை வழங்கி கையொப்பம் இட்டுள்ளார்.

உள்ளக அரசியல் நிலைமைகளை கையாள்வதற்காக அதாவது தீவிர பெரும்பான்மை தரப்புக்களை திருப்திப்படுத்துவதற்காக ஐ.நா. அரங்கில் எதிர்ப்புக்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர், மறுபக்கத்தில் பிரேரணையில் பரிந்துரைத்த விடயங்களையும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் பொறுப்புக் கூறலைச் செய்வதற்கான கால அட்டவணையை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனையும் அவர் எதிர்க்கவில்லை. மேலும் இங்கு அமைச்சர் திலக் மாரப்பனவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ எதிர்காலத்தில் வேறுபட்ட கருத்துக்களை கூறலாம். ஆனால் பொறுப்புக்கூறலைச் செய்வோம் என்று இலங்கை அரசாங்கம் ஐ.நா.அரங்கத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிலிருந்து அரசாங்கத்தினால் விலகிச் செல்ல முடியாது என்பது தான் முக்கிய விடயமாகின்றது.

கேள்வி:- நீங்கள் சந்தித்திருந்த சர்வதேச நாடுகள் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றன என்பதோடு அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையவுள்ளன?

பதில்:- இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களும் கவலைகளை வெளியிட்டிருந்தார்கள். எனினும் பொறுப்புக்கூறல் செயன்முறைக்காக உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் என்ற வகையில் அவர்கள் வழங்கும் அதேநேரம், ஜனாதிபதி, பிரதமர், அரசியல், இராஜதந்திர சந்திப்புக்களின் போது பொறுப்புக்கூறலை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கேள்வி:- இலங்கையில் நடைபெற்ற விடயங்களுக்கு சர்வதேசத்தினால் நீதி நிலைநாட்டப்படும் என்ற விடயத்தில் உங்களுடைய நம்பிக்கைத்தன்மை எவ்வாறு உள்ளது?

பதில்:- உலக சரித்திரத்தில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் அரங்கேறிய நாடுகளில் காலம் கடந்தாலும் அதற்கான பொறுப்புக்கூறல் நடைபெற்றிருக்கின்றமைக்கான உதாரணங்கள் உள்ளன. ஆகவே இலங்கை அரசாங்கம் நாட்களைக் கடத்தினால் பொறுப்புக்கூறலிலிருந்து நழுவி விடமுடியும் என்று கருதலாம். காலம் கடந்தாலும் இழைக்கப்பட்ட விடயங்களுக்கு பதிலளித்து தான் ஆகவேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிட்டும் வரையில் நாமும் ஓயப்போவதில்லை.

(நேர்காணல்:- ஆர்.ராம்)