பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பாகியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பெங்களூரு அணியை பணிக்க, பெங்களூரு அணி சென்னை அணியின் சுழல் பந்துகளில் சிக்கி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

71 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டாலும் (வேட்சன் 0), 2 ஆவது விக்கெட்டுக்காக அம்பத்தி ராயுடு மற்றும் சுரேஷ் ரய்னா நிதானமாக ஜோடி சேர்ந்தாடி வந்தனர்.

இந் நிலையில் சுரேஷ் ரய்னா 8.5 ஆவது ஓவரலில் 15 ஓட்டங்களை பெற்றதுடன் ஐ.பி.எல். அரங்களில் 5000 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

எனினும் அவர் அடுத்த ஓவரில் அதிரடியாக ஆட முற்பட்டபோது மெய்ன் அலியினுடைய பந்து வீச்சில் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனால் சென்னை அணியின் இரண்டாவது விக்கெட் 40 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

தொடர்ந்து கேதர் யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 11.5 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை கடக்க 14.2 ஆவது ஓவரில் ராயுடு 28 ஓட்டத்துடன் மொஹமட் சிராஜ் உடைய பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜடேஜா களமிறங்கி  துடுப்பெடுத்தாட சென்னை அணி இறுதியாக 17.4ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து பெங்களூரு அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் கேதர் யாதவ் 13 ஓட்டங்களையும், ஜடேஜா 6 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.