சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் புயலில் சிக்கிய பெங்களூரு அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பாகியது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி களம் புகுந்தது.

அதன்படி அந்த அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக பார்தீப் பட்டேல் மற்றும் விராட் கோலி களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடி வர முற்பட்டபோதும் ஹர்பஜன் சிங்கின் சுழலில் சிக்கி பெங்களூரு அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 38 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது. 

விராட் கோலி 6 ஓட்டத்துடனும், அவரையடுத்து களமிறங்கிய மொய்ன் அலி,ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆகியோர் தலா 9 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இவர்களின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய சிம்ரன் ஹெட்மெயர் டக்கவுட் முறையில் ரன் அவுட் ஆக, சிவம் டியூப் 2 ஓட்டத்துடன் இம்ரான் தாகீருடைய பந்து வீச்சிலும், கிரேண்ட்ஹோம் 4 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சிலும், நவடிப் சைனி 2 ஓட்டத்துடனும், சஹால் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் பெங்களூரு அணி 13.4 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து பார்தீப் பட்டேலுடன் உமேஷ் யாதவ் 9 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து ஆடி வந்தார். எனினும் அவர்கள் இருவராலும் இணைப்பாட்டமாக 11 ஓட்டங்களே பெற முடிந்தது.

அதன்படி உமேஷ் யாதவ் ஒரு ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, பார்த்தீப் பட்டேலும் 17 ஆவது ஓவரின் முதல் பந்தில் 29 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் பெங்களூரு அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரம் பெற, சென்னை அணிக்கு வெற்றியிலக்காக 71 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாகீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 2 விக்கெட்டையும் மற்றும் பிராவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.