(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ். மாவட்டத்துக்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக பொலிஸ்  நலன்புரி பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய எம்.டி.ஈ.எஸ். தமிந்த நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக கிளினொச்சி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எம். குணரத்னவே  பதில் கடமைகளை முன்னெடுத்த நிலையிலேயே  யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராக தமிந்த நியமிக்கப்ப்ட்டுள்ளார். 

அத்துடன் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அந்த பதவியில் இதுவரை செயற்பட்ட ஆர்.எம்.என்.ஜி.ஓ.பெரேரா களுத்துறைக்கு இடமாற்றப்ப்ட்டு, கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய சமன் யட்டவர திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவை அவசியம் கருதி இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 15 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும் 3 பொலிஸ் அத்தியட்சர்களுக்கும் இந்த பட்டியலில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

இதனிவிட சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிபாளராக இதுவரை கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸா கொழும்பு தெற்கு பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். பல முக்கிய விசாரணைகள் அவரின் கீழ் இடம்பெற்று வந்த நிலையிலேயே அவர், கொழும்பு தெற்கு பிரிவில் இருந்து திருகோணமலைக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்ட சமன் யட்டவரவின் இடத்தை நிரப்ப இவ்வாறு அங்கு இடமாற்றப்பட்டுள்ளார். 

இதன் பிரகாரம், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வௌ்ளவத்தை, கருவாத்தோட்டம், பொரளை, நாரஹேன்பிட்ட மற்றும் கிருலப்பனை ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக நிசாந்த டி சொய்ஸா செயற்படவுள்ளார். 

இதனை தவிர, பிரதி பொலிஸ் மா அதிபர் மெவன் சில்வா பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் பதில்  பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து வந்த நிலையில் அப்பதவியில் நிரந்தரமாக அமர்த்தப்பட்டுள்ளார். ஜயசூரிய மற்றும் அபேவிக்ரம அகையோர் அவ்வந்த பகுதிகளில் நிரந்தரமாக பதவியில் அமர்த்தப்ப்ட்டுள்ளனர்.

இதனைவிட அண்மையில் காலி - ரத்கம பகுதியில் இரு வர்த்தகர்கள் பொலிஸாரல கடத்தி கொல்லப்பட்ட விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், இடமாற்றப்பட்டியலில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரும் இடமாற்றப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்

அச்சம்பவத்துடன் இணைத்ததாக இடமாற்றத்துக்கான காரணம் கூறப்படாதபோதும், காலி பிரதிப் பொலிச் மா அதிபராக இருந்த சந்தன அழகக் கோண் பொலிஸ் தலைமையகத்துக்கு பொறுப்பாக இடமாற்றப்பட்டுள்ளார்.  

இந் நிலையில் காலிக்கு அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெதசிங்கவும், அம்பாறைக்கு பொலிஸ் காலாற்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  கருணாரத்னவும் அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.