தெற்காசியா முழுவதும்  இன்றைய திகதியில்  60 மில்லியன் முதுமைப் பருவம் அடைந்தவர்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அத்துடன் இவர்களின் ஆரோக்கியம், உடலியக்க செயற்பாடு குறைபாட்டின் காரணமாக கேள்விக்குறியாகியுள்ளது என்றும் தெரிவிக்கிறது.

பொதுவாக அறுபது வயதை அடைந்த முதியவர்களுக்கு இதய நோய், டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய், நீரிழிவு நோய், ஓர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, cataract எனப்படும் கண் புரை நோய், தூக்கமின்மை குறைபாடு, டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இதற்காக இவர்களுக்கு தற்போதைய நவீன மருத்துவம் பரிந்துரைக்கும் பொலிபார்மசி எனப்படும் நவீன மருந்து வகை கொள்கையினாலும், சரியான திட்டமிடலாலும் இவர்களின் ஆரோக்கியம் அதாவது உடல் சார்ந்த ஆரோக்கியத்திற்கு முழுமையான நிவாரணமும் கிடைக்கிறது.

இந்நிலையில் இவர்கள் இதனுடன் இயலாமை அதாவது பலவீனம், தனிமை, குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிப்பு, பாதுகாப்பான நிரந்தர நிதி ஆதாரமின்மை, இல்லத்தில் தனியாக இருப்பதால் குற்றம் செய்பவர்களை மறைமுகமாக தூண்டுவது போன்ற சமூக மற்றும் புற காரணங்களுக்கும் இவர்கள் எதிர்கொள்கிறார்கள்.இத்தகைய காரணங்களால் பாதிக்கப்படும் போது, அதனை கட்டுப்படுத்தவோ அல்லது எதிர்கொள்ளவோ இயலாமல் இவர்கள் தங்களது உயிரை இழக்க நேரிடுகிறது. 

அண்மைய ஆய்வின்படி 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நாள்தோறும் உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றை மேற்கொள்பவராக இருந்தால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து கொள்கை அவர்களுக்கு உதவி செய்கிறது. அத்துடன் இவர்கள் சமூக மற்றும் பிற காரணங்களாலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் போதிய சமயோஜித அறிவினை பெற்றிருக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனவே முதியவர்கள் ஒருபோதும் தங்களது உடல் இயக்க செயற்பாட்டினை அதாவது உடற்பயிற்சியினை கைவிடக் கூடாது என்றும், நாள்தோறும் தவறாமல் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதுமைக்கான மருத்துவத்துறை அறிவுறுத்துகிறது.

எமது மண்ணில் உள்ள ஒவ்வொரு முதியவர்களும் அனுபவத்தின் பெட்டகங்கள் என்பதனை உணர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தருவோம். அதற்கான ஊக்கத்தினையும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

டொக்டர் அனந்தகிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.