ஐ.பி.எல். போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. 

12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டித் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி தரவரிசையில் முதல்  நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். 

இந் நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.

இப் போட்டியில் களமிறங்குவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாலை 6.10 மணிக்கும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6.45 மணியளவிலும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டன.

சென்னை வீரர் சுரேஷ் ரய்னாவுக்கு 15 ஓட்டங்களும், பெங்களூரு அணித் தலைவர் விராட் கோலிக்கு 52 ஓட்டங்களும் ஐ.பி.எல். அரங்கில் ஐயாயிரம் ஓட்டங்களை எட்டுவதற்கு தேவை என்ற நிலை உள்ளது. 

சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 38 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும். எனினும் இதில் மூன்று கலரிகள் முடக்கப்பட்டதன் காரணமாக இருக்கையின் எண்ணிக்கை 26 ஆயிரமாக குறைந்துள்ளது.

பொதுவாக ஐ.பி.எல். ஆரம்ப விழாவானது நடிகர் நடிகைகளின் நடனம், கலை நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகும். ஆனால் இம்முறை காஷ்மீரின் புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அது கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆரம்ப விழாவுக்கு செலவிடப்படும் செலவுத் தொகையை உயிரிழந்த துணை இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 

இதேபோல் தொடக்க ஆட்டத்தில் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானமும் நலநிதிக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை குவிக்கும் வீரருக்கு செம்மஞ்சள் நிற தொப்பி வழங்கப்படும். கடந்த ஆண்டில் இந்த தொப்பியை 735 ஒட்டங்களை குவித்த ஐதராபாத் அணித் தலைவர் வில்லியம்சன் பெற்றார்.

அதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு ஊதா நிற தொப்பி வழங்கப்படும். கடந்த ஆண்டில் இந்த தொப்பியை 24 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.