முறையற்ற காதலால் துயருற்று போன வாழ்வு.!

Published By: Robert

17 Apr, 2016 | 09:48 AM
image

"நான் செய்த தவறை எண்ணி வருந்துவதினால் மட்டும் நான் தவறு செய்யவில்லையென்றாகிவிடாது. அவளின் மீதிருந்த ஆசை, காதல் எல்லாம் என்னை முட்டாளாக்கியது. இதனால் தான் பண்பாட்டை இழந்து நடந்துகொண்டேன். “

இது கொலைக்குற்றத்துக்காக சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ரொஹானின் உள்ளக்குமுறலாகும். ரொஹான் தொடர்ந்து மனம் திறந்து பேசுகையில்,

"என்னுடைய குடும்பத்தில் பெரிதாக வசதிவாய்ப்புகள் இருக்கவில்லை. எப்படியாவது படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற வெறி சிறுவயது முதலே என்னுள் இருந்தமையால் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலும் நான் இடைவிடாது கல்விகற்றேன்.எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாகப் பிறந்த இரட்டை குழந்தைகள்.

நான் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதி சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானேன். அங்கு முதல் இரண்டு வருடங்கள் அப்பா செலவுக்குப் பணம் அனுப்பினார். அதன்பின் நான் தனியார் வகுப்புகளுக்கு படிப்பிக்கச் சென்று அந்தப் பணத்தில் என்னுடைய செலவுகளை பார்த்துக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் சீக்கிரமாக பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழிலொன்றுக்கு சென்று என்னுடைய பெற்றோரின் சுமையை குறைக்க வேண்டும் என்றே நினைத்தேன். அதன்படி பட்டப்படிப்பை நிறைவுசெய்த கையோடு நான் தொழிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். எனினும், அந்த வேலை என் படிப்புக்கு ஏற்றாற்போல் அமையவில்லை. குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு நான் தொடர்ந்து அங்கு வேலைக்குச் சென்றேன். அதுமட்டுமின்றி சிரமத்தை பார்க்காது அங்கு கிடைக்கும் சம்பளத்துக்கு மேலதிகமாக தனியார் வகுப்புகளுக்கும் சென்று படிப்பிக்க ஆரம்பித்தேன். கடவுளே என்று நான் சம்பாதிக்கும் பணம் குடும்பத்தின் செலவுகளுக்குப் போதுமானதாகவிருந்தது.

அந்ததருணத்தில் எங்களுடைய வீட்டை திருத்தியமைப்பது, தம்பி, தங்கையை நன்றாக படிக்க வைப்பது, அம்மா, அப்பாவை பார்த்துக்கொள்வது என்று எனக்கு நிறையக் கடமைகள் இருந்தன. எனவே அவற்றை நல்ல முறையில் செய்து முடிக்க திட்டமிட்டு செலவுச் செய்து பணத்தை சேமித்துக்கொண்டேன்.

ஒருவழியாய் நான் கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்தது போல் தம்பியும்இ தங்கையும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார்கள். அன்று எனது குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்கவில்லை. அதுமட்டுமின்றி நான் கல்விகற்பித்த மாணவர்களும் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று என்னை பெருமைப்படுத்தினார்கள்.

எனக்கு நண்பர்கள் என்றோ காதலி என்றோ யாரும் இருக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு பின்னர் மிகவும் பின்தங்கிய கிராமமொன்றிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராக நியமனம் கிடைத்தது. எனவே, நான் சில காலம் எனது வீட்டை விட்டுப் பிரிந்திருக்க நேர்ந்தது.

நான் என்னுடைய தொழில் நிமித்தம் அக்கிராமத்துக்கு சென்றேன். அங்கு ஆசிரியர்களுக்கு என்று தனியாக இல்லங்கள் எதுவும் இருக்கவில்லை. எனவே எனக்கு அக்கிராமத்தின் கிராம சேவகரின் வீட்டில் தங்குவதற்கு இடம் கிடைத்தது. அந்த வீட்டில் கிராம சேவகரும் ,அவருடைய மனைவியும், மகளும் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். நான் அங்கு ஆறு வருடங்கள் இருந்தேன். எனினும், என்னுடைய தந்தை உயிரிழந்ததன் பின்னர் எனக்கு குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நான் நகர்ப் புற பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டேன். அச்சந்தர்ப்பத்தில் தம்பியும், தங்கையும் பட்டப்படிப்பை முடித்து தொழிலுக்கு சென்றிருந்தார்கள். எனவே எனக்கு குடும்ப பொறுப்பு சற்றுக் குறைந்திருந்தது. இது இவ்வாறிருக்க, அம்மா என்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்தார். நான் தங்கையின் திருமணம் நடந்து முடிந்ததன் பின்னர் திருமணம் செய்துக்கொள்கின்றேன் என்று கூறி தட்டிக்கழித்தேன்.

எனவே அம்மா, தங்கைக்கு விரைவாக வரன் பார்க்க ஆரம்பித்தார். இதனிடையே தங்கையும் பல்கலைக்கழகத்தில் அவளுடன் ஒன்றாக படித்த இளைஞன் ஒருவனை காதலிக்கின்றாள் என்பது தெரியவந்தது. எனவே நாங்கள் அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவளின் விருப்பத்துக்குக்கேற்பவே அந்த பையனை அவளுக்கு திருமணம் செய்து வைத்தோம். அதன்பின் தம்பியும் வெளிநாட்டில் தொழிலொன்று கிடைத்து சென்றுவிட்டமையால், அம்மாவுக்குத் துணையாக திருமணம் முடித்த கையோடு தங்கை அவளுடைய கணவருடன் எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.

இதனைதொடர்ந்தே அம்மாவும் தங்கையும் இணைந்து மும்முரமாக எனக்கு மணமகள் தேட ஆரம்பித்தார்கள். எனினும், அதில் ஒன்றுகூட என் மனதுக்குப் பிடிக்கவில்லை. நான் அவை அனைத்தையும் ஏதோவொரு காரணத்தை கூறி தட்டிக்கழித்தேன்.

இதனிடைய சில மாணவர்களின் வீடுகளுக்கு சென்று விசேட வகுப்புகளையும் நடாத்தி பணம் சம்பாதித்தேன். இது இவ்வாறு நான் செல்லும் வீடொன்றிலிருந்த இளம் தாயொருவருக்கும், எனக்கும் மெல்ல மெல்ல நட்பு துளிர்விட ஆரம்பித்தது. அவள் தான் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பார்ப்பதற்கு இளமையாகவும், அழகாகவும் காட்சியளிப்பாள். மீனாவுக்கு தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என்று யாருமில்லை.சிறுவர் இல்லமொன்றிலேயே வளர்த்துள்ளார். அதன்பின் கணவரின் பெற்றோரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே திருமணம் செய்துள்ளார்.

அவளுடைய கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்த நிலையில் ஒரே மகனுடன் தனியாக வசித்து வந்தாள். கணவர் 6 வருடங்களுக்கு ஒரு தடவைதான் இலங்கைக்கு வந்து போவார்.

எனக்கும் மீனாவுக்கும் இடையில் எதிர்பாராதவிதமாக இனம்புரியாத உறவொன்று ஏற்பட ஆரம்பித்தது. அவள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி என்னிடம் எல்லா விடயங்களையும் பகிர்ந்துகொண்டாள். பல நாள் நான் அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு இரவு மீனாவின் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வருவேன். மீனாவின் மகனும் என்னிடம் மிக அன்பாகப் பழகுவான். சிறுவயது முதலே அவனுடைய தந்தை அவனருகில் இல்லாத காரணத்தினால் என்னிடம் அந்த அன்பை எதிர்பார்த்தான். மீனாவும் அவ்வாறே.

பல நாள் எனக்கும் இப்படியானதொரு அழகான குடும்பம் இருந்தால் எவ்வளவு நன்றாகவிருக்குமென்று நான் நினைத்திருக்கின்றேன். அதுமட்டுமின்றி, என்னை அறியாமலே நான் மீனாவை காதலிக்கவும் ஆரம்பித்தேன்.அவளும் என்னை காதலித்தாள். எனினும், அந்த மகிழ்ச்சி எனக்கு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. மீனாவின் கணவன் வெளிநாட்டிலிருந்து வரவே என்னால் அங்கு போய் வருவது இயலாத காரியமாய் போனது. ஆயினும், அவர்களை பார்க்க முடியாமல் பல நாள் ஏங்கினேன்.இறுதியில் மீனாவின் மகனுக்கு பாடம் கற்பிக்கப் போவது போல் வாரத்தில் சில நாட்கள் அங்கு போய் வந்தேன்.

மீனாவின் கணவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. என்னுடைய வருகை அவர் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அவர் வெளிநாட்டிலிருந்த நாட்களில் நான் அங்கு வந்து சென்றதையும் அயலவர்கள் பலர் அவரிடம் பலவாறு சொல்லியிருந்தார்கள்.

இவையனைத்தையும் கேட்ட அவர் ஒருநாள் நான் அங்கு சென்றிருந்த போது "இனிமேல் நீ எக்காரணம் கொண்டும் இங்கு வரக்கூடாது " என்றுகூறி என்னை அங்கிருந்து போகச் சொன்னார். நானும் எதுவுமே பேசமால் அங்கிருந்து வந்துவிட்டேன். எனினும் எனக்கு மீனாவின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. மீனாவுக்கும் எனக்கும் இடையிலிருந்த உறவு நிரந்தரமற்றது என்பதை அறிந்த போதிலும் மீனாவை எனது சொந்தமாக்கிக்கொள்ளவே என் மனம் துடித்தது.

நான் மீனாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்தேன். அப்போது மீனா, "' இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுங்கள் கணவர் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார்" என்று கூறினார். எனினும் எனக்கு அவ்வளவு பொறுமையிருக்கவில்லை. நான் மீனாவின் மீதுள்ள காதலினால் பைத்தியமாகியிருந்தேன். இதனால் மீனாவின் கணவர் வெளிநாட்டுக்கு செல்ல ஒரு வாரம் இருக்கும் போது நான் அவர்களுடைய வீட்டுக்கு சென்று அவளுடைய கணவருடன் முரண்பட ஆரம்பித்தேன்.

வார்த்தை முற்றி இருவரும் சண்டையிட்டுக் கொண்டோம். இறுதியில் நான் அவரை பலமாக தாக்க ஆரம்பிக்க அவர் நிலத்தில் விழுந்தார். அதுமட்டுமின்றி அவர் விழுந்தன் பின்னரும் நான் அவரை விடாது தாக்கினேன். இந்நிலையில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் சுயநினைவிழந்து இருந்தார்.

மீனா அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது கீழே விழ்ந்து காயங்களுக்குள்ளானார் என்றே வைத்தியர்களிடம் கூறியிருந்தார். எனினும், இரண்டு நாட்களின் பின்னர் அவருக்கு சுயநினைவு வந்தது. எனவே, பொலிஸாரை வரசொல்லி எனக்கும், மீனாவுக்கும் இடையில் இருந்து வந்த தகாத உறவின் காரணமாக தான் நான் அவரை கொலைச்செய்ய முயற்சித்தேன் என்று வாக்குமூலம் வழங்கியிருந்தார். அதன்படி நான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டேன்.

அதுமட்டுமின்றி, இரண்டு நாட்களின் பின்னர் சிகிச்சை பயளனிக்காத நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். அதனைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரும் எனக்கெதிராக வலுவான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். அதன்பின்னர் எனக்கு சிறைத் தண்டனை என்பதும் உறுதியானது.

மேலும் மீனாவின் கணவரின் குடும்பத்தினர் அவளிருந்த வீட்டிலிருந்தும் அவளை துரத்திவிட்டார்கள். அதன்பின்னர் மீனா எங்கள் வீட்டுக்கே தஞ்சமென்று வந்துவிட்டாள். எனது அம்மாவும், தங்கையும் மீனாவின் நிலமையறிந்து அவளை ஏற்றுக்கொண்டார்கள்.

இன்று என்னுடைய வயதான தாயை பார்த்துக்கொண்டு மீனா வீட்டிலிருக்கின்றாள். நான் சிறையிலிருந்து விடுதலையாகியவுடன் மீனாவுடன். என்னுடைய இறுதிகாலத்தை கழிக்கும் எதிர்பார்ப்பிலேயே என்னுடைய விடுதலை நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.

குறிப்பு : "எனக்கு மீனாவின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. மீனாவுக்கும் எனக்கும் இடையிலிருந்த உறவு நிரந்தரமற்றது என்பதை அறிந்த போதிலும் மீனாவை எனது சொந்தமாக்கிக்கொள்ளவே என் மனம் துடித்தது. அதனால் தான் நான் அன்று பொறுமையிழந்தேன். “

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48