பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான கட்டிகள் என்கின்ற போது கர்ப்பப்பையில் தோன்றும் பைபுரோயிட் (Fibroid) கட்டிகள் கர்ப்பப்பையின் இரு புறங்களிலுமுள்ள சூலகங்களில் ஏற்படும் சூலகக்கட்டிகள் (Ovarian Cysts) என்பன அடங்கும்.

இவ்வாறான கட்டிகள் உள்ளபோது கர்ப்பந்தரித்தாலோ அல்லது கர்ப்பமாக உள்ளபோது இவ்வாறான கட்டிகள் கண்டறியப்பட்டாலோ மக்கள் மத்தியில் பெரிய ஒரு பயம் ஏற்படுவது வழக்கம். அதாவது கர்ப்பப்பையில் கரு வளரும்போது கட்டியும் சேர்ந்து வளர்ந்து தாயின் உடல் நலத்திற்கோ அல்லது குழந்தையில் ஆரோக்கியத்திற்கோ தீங்கை ஏற்படுத்துமென ஏங்குவது வழக்கம். அத்துடன் இவ்வாறான கட்டிகள் கண்டறியப்படும்போது இதற்கான சரியான தீர்வுகள் என்ன? இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பன குறித்து மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்படவாய்ப்புள்ளது.

ஆகவே இதற்குரிய சரியான விளக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் சரியான தீர்வுக்குரிய பாதையில் உங்களை வழி நடத்துவதும் மருத்துவத்துறையினரான எமது கடமை. இதன் போதுதான் இதற்கான தீர்வுகளை மருத்துவத்துறையினர் சிபார்சு செய்யும் போது அவற்றை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்

கர்ப்பக்காலத்தில் சூலகக்கட்டிகள் கண்டறியப்பட்டால் (Ovarian Cysts) அவற்றுக்கான தீர்வுகள்.

கர்ப்பகாலத்தில் நாம் சாதாரண தேவைகளுக்காக ஸ்கான் (Secan) பரிசோதனை செய்யும் போது சூலகக்கட்டிகள் கண்டறியப்படும்.

வேறு சில சந்தர்ப்பங்களில் கர்ப்பக்காலத்தில் அசாதாரண வயிற்றுவலியைப் பெண்ணொருவர் கூறும் போது நாம் அதற்கான காரணங்களை கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் ஸ்கான் என்பன செய்யும் போது சூலகக்கட்டிகள் அறியப்படுவது வழக்கம்.

இவ்வாறான சூலகக்கட்டிகளில் பெரும்பாலானவை சாதாரண நீர்க்கட்டிகளாகவும் சிறிய பருமன் அல்லது ஒரு தேசிக்காய்ப் பருமன் கொண்டனவாகவும் காணப்படும். இவற்றுக்கு மேலதிகமான சிகிச்சைகள் எதுவும் தேவைப்படுவதில்லை. ஏனெனில் சில மாதங்களில் இவை தாமாகவே மறைந்துவிடும். ஆனால் சற்றுப்பெரிய பருமனுடைய சுலகக்கட்டிகள் அதாவது ஒரு தோடம்பழத்தின் அளவு அல்லது பெரிய அளவில் கண்டறியப்பட்டால் அவை வயிற்றுவலியைத் தோற்றுவிக்கும். அத்துடன் அவை மேலும் வளருகின்றனவா என்பதனை ஓரிரு மாத இடைவெளியில் மீண்டும் செய்யும் ஸ்கான் பரிசோதனையில் கண்டறியலாம். இவ்வாறு மேலும் வளருகின்ற கட்டிகளுக்கும் வயிற்றுவலியைத் தோற்றுவிக்கும் சூலகக் கட்டிகளுக்கும் சிகிச்சையாக சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்பக்காலத்தில் இவ்வாறான சூலகக்கட்டிகளுக்கு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளும்போது கர்ப்பக்காலத்தின் முதல் 3 மாதங்களில் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில் இந்த முதல் 3 மாதங்களில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தும் மயக்க மருந்துகளின் தாக்கம் சிசுவைக் கூடுதலாகப் பாதிக்கும் என்பதால் இந்தக்காலப்பகுதியில் இவற்றைக் கூடுதலாகத் தவிர்க்கின்றோம். எனவே இவ்வாறான சத்திரசிகிச்சைகளை 4/5 மாதகாலப்பகுதியில் மேற்கொள்ள முடியும்.

இந்தக் கட்டிகள் வளராது எவ்வித வயிற்றுவலிகளையும் தோற்றுவிக்காது மற்றம் ஸ்கான் பரிசோதனையில் எவ்வித ஆபத்துகளுமற்ற நீர்க்கட்டிகள் என கண்டறியப்படும்போது கர்ப்பக்காலத்தில் எவ்வித சிகிச்சைகளையும் மேற்கொள்ளாது பிரசவத்தை நிறைவு செய்து அதன் பின் மேலும் 3 மாதங்களின் பின் இக்கட்டிகள் தொடர்பாகப் பரிசீலித்து அவை தொடர்பான சிகிச்சைகளை முன்வைக்க முடியும்.

கர்ப்பக்காலத்தில் சூலகக்கட்டிகள் உள்ளபோது ஏற்படக்கூடிய சிக்கல்கள்

இவ்வாறான சூலகக்கட்டிகள் சிறியனவாகவும் எவ்வித சிக்கலும் இல்லாதனவாகவும் காணப்படும். எனினும் சில வளர்ந்து வரும் பெரிய கட்டிகள் வயிற்றுலி மற்றும் கட்டிகள் முறுக்குப்படுதல் வெடிப்படைதல் போன்றவற்றால் ஏற்படும் உக்கிரவயிற்றுவலி மேலும் சிசு கர்ப்பப்பையினுள் இருக்கும் நிலையில் ஏற்படும் அசாதாரண தன்மைகள் அதாவது குறுக்காக இருக்கும் நிலை மற்றும் குறைமாதப் பிரசவலி ஆரம்பித்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

கர்ப்பகாலத்தில் சூலகக்கட்டிகள் உள்ளபோது சாதாரண பிரசவம் முடியுமா?

கர்ப்பகாலத்தில் சூலகக்கட்டிகள் உள்ளபோது சாதாரண பிரசவம் முடியும். ஆனால் சிலவேளைகளில் இந்த சூலகக்கட்டிகள் பிரசவப்பாதையைத் தடுக்கும் போது சாதாரண பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் இச்சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. சில வேளைகளில் பெரிய சூலகக் கட்டிகள் உள்ளபோது நாம் சிசேரியன் பிரசவத்தைத் திட்டமிட்டு குழந்தையைப் பிரசவிப்பதுடன் அதேவேளையில் சூலகக்கட்டிகளையும் அகற்றுவோம். இதனால் ஒரே சத்திரசிகிச்சையில் இரு தேவைகளையும் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும்.

கர்ப்பக்காலத்தில் கர்ப்பப்பையில் பைபுரோயிட் கட்டிகள் உள்ளபோது ஏற்படக்கூடிய சிக்கல்கள் எவை ?

கர்ப்பப்பையில் பைபுரோயிட் கட்டிகள் உள்ளபோது கருத்தரிக்க தாமதமாவதுடன் கருத்தரித்த பின்னரும் கூட இயற்கையான கருக்கலைதலுக்கு உட்பட வாய்ப்புள்ளது. மேலும் இவ்வாறு கர்ப்பப்பையில் கட்டிகள் உள்ளவர்கள் கர்ப்பக்காலத்தில் ஒரு விதமான தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்படுவது வழக்கம்.

இதன்போது பெருமளவு ஆபத்துக்கள் இல்லாதவிடத்தும் இந்த வலியால் பெண்கள் அச்சப்படுவது வழக்கம். மேலும் இவ்வகை பைபுரோயிட் கட்டிகள் உள்ளபோது குறை மாதப்பிரசவம் சிசு கர்ப்பப்பையில் குறுக்காக இருக்கும் நிலை சாதாரண பிரசவத்திற்கு ஏற்படக் கூடிய சிக்கல்கள் மற்றும் பிரசவத்திற்கு பின்னர் ஏற்படக் கூடிய அதிகூடிய குருதிப்பெருக்கு போன்றன தோன்ற வாய்ப்புள்ளது.

கர்ப்பகாலத்தில் பைபுரோயிட் கட்டிகள் எவ்வாறு அறியப்படுகின்றன?

கர்ப்பக்காலத்தில் கர்ப்பவதி ஒருவரின் வயிற்றைப் பரிசோதிக்கும் போது வயிற்றின் பருமன் அளவுக்கதிகமாக பெரிதாக இருப்பது இவ்வாறான கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதனை நாம் ஸ்கான் பரிசோதனையில் உறுதிப்படுத்துகின்றோம். இதன்போது கட்டியின் பருமன் கட்டிகளின் எண்ணிக்கை கட்டி இருக்கும் அமைவிடம் என்பன அறியப்படும்.

கர்ப்பக்காலத்தில் பைபுரோயிட் கட்டிகளுக்கு எவ்வாறான சிகிச்சைகள் உள்ளன.

கர்ப்பக்காலத்தில் பைபுரோயிட் கட்டிகளுக்கு வலி நிவாரணிகளாக வயிற்றுநோவைக் குறைக்கும் மருந்துகள் பாவிக்கப்படும். இதனைத் தவிர வேறு எந்த சிகிச்சைகளோ அல்லது சத்திரசிகிச்சைகளோ மேற்கொள்ள முடியாது. அதாவது கர்ப்பக்காலத்தில் பைபுரோயிட் கட்டிகளை எந்தக் காரணத்துக்கும் அகற்ற முடியாது. ஏனெனில் இவ்வாறு சத்திர சிகிச்சைகள் மூலம் கட்டிகளை கர்ப்பக்காலத்தில் அகற்ற முட்பட்டால் அதி கூடிய குருதிப்பெருக்கை ஏற்படுத்தி ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. அத்துடன் பிரசவம் சிசேரியன் ஆக இருப்பின் கூட இதன் போது கட்டியை அகற்ற முற்பட முடியாது. இதுவும் ஆபத்தில் முடியும் என்பதால் கர்ப்பக்காலத்தில் அல்லது பிரசவத்தின் போது இவை அகற்றப்படுதில்லை. ஆனால் பிரசவம் முடிவடைந்து மூன்று மாத காலப்பகுதியின் பின்தான் இவ்வாறான கட்டிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படும். அதாவது தேவை ஏற்படின் சத்திரிசிக்கை மெற்கொள்ளப்படும் எனவே கர்ப்பக்காலத்தில் கண்டறியப்படும் சூலக மற்றும் பைபுரோயிட் கட்டிகளுக்கு தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு தீர்வு கண்டு சிக்கல்களை தவிர்க்கலாம்.