இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர், விமானம் மூலம் நேற்று மதுரைக்கு சென்ற பின்னர் அவர்கள், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அந்த 13 மீனவர்களையும் பிடித்துச் சென்று ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதேபோல, ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும், நம்புதாளையைச் சேர்ந்த 8 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 8ஆம் திகதிவிடுதலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, மெரிகானா கேம்ப்-பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் விமானம் மூலம் நேற்று 22ஆம் திகதி மதியம் மதுரை வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி, கொலம்பஸ், அடைக்கலம், ஜெபமாலை அருள் சகாயம், முருகானந்தம், ஜெயகாந்த் ஆகிய 5 மீனவர்களும் பாம்பன் வந்து சேர்ந்தனர். இவர்களை, மீனவர்களின் உறவினர் ரூபன் மற்றும் மீன்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் மதுரை சென்று அழைத்து வந்தனர். இதுபோல், மற்ற மீனவர்களையும் அவர்களுடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.