(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சியினருடனான கலந்துரையாடலின் பின்னரே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதை நோக்காகக் கொண்ட 20 ஆம் அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான 20 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தினை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றுவதற்காக ஜே.வி.பி அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. 

அந்த வகையில் நேற்று  இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடனான கலந்துரையாடலின் போதே அதன் தலைவர் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துதுரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலிக் சமரவிக்ரம ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சி சார்பிலும், அநுர குமார திஸாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் ஜே.வி.பி சார்பிலும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குதல் ஆகிய விடயங்களில் உள்ளடங்களாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.