இன்று பலரிடமும் சர்வசாதாரணமாகக் காணக்கூடிய ஒரு நோயாக நீரிழிவு உருவாகியிருக்கிறது. எந்தவொரு சாதாரண சிகிச்சைக்குச் செல்லும்போதும் ‘நீங்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?’ என்ற கேள்வி நிச்சயமாகக் கேட்கப்படும். ஒப்பீட்டு ரீதியில், மேலைநாடுகளை விட தெற்காசிய நாடுகள், குறிப்பாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நீரிழிவு நோய்த் தாக்கம் அதிகமுள்ள நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்? நீரிழிவை எவ்வாறு தடுக்கலாம்? என்ற கேள்விகளுடன், பிரபல நீரிழிவு மருத்துவரும், மதுரையில் இயங்கிவரும் செண்பகம் நீரிழிவு மருத்துவமனை’ டொக்டர் கிருஷ்ணமூர்த்தி அவரது மருத்துவமனையில் சந்தித்தோம். முழுக்க முழுக்க நீரிழிவு பற்றிய விழிப்புணர்வுக்கான நேர்காணலாக இது அமைகிறது.

* நீரிழிவு நோய் உருவாவதற்கு என்ன காரணம்?

பரம்பரைக் காரணிகள் முதற்கொண்டு, உடற்பருமன், தவறான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை எனப் பொதுவாக நீரிழிவுக்கு சில காரணங்களைக் குறிப்பிடலாம். அத்தோடு, நாம் உண்ணும் உணவின் கொழுப்புச் சத்தானது, வயது ஆக, ஆக உடலில் அதிக அளவுக்கு சேமிக்கப்படுவதால், வயது முதிர்வையும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

* தெற்காசிய நாடுகளில் இது அதிகமாகக் காணப்படுவது ஏன்?

புவியியல் மற்றும் இனவேறுபாடுகளே இதற்குக் காரணமாகின்றன. இதனால், மேற்கத்திய நாடுகளில், அறுபது வயதுக்கு மேற்பட்டோரே நீரிழிவுக்கு ஆளாகும் அதேசமயம், தெற்காசிய நாடுகளில், நாற்பது வயதுக்குள்ளாகவே நீரிழிவுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில், உடல் எடை நூற்று இருபது அல்லது நூற்று முப்பது கிலோவைத் தாண்டுவோரையே நீரிழிவு தாக்குகிறது எனினும், நமது நாடுகளில், சற்றே உடல் எடை அதிகமானாலும் அவர்கள் நீரிழி வுக்கு ஆளாகிறார்கள். அதிகரிக்கும் உடல் எடையில் சேகரிக்கப்படும் கொழுப்புச் சத்து பரவலாக உடல் எங்கும் தங்காமல், ஒட்டு மொத்தமாக வயிற்றுப் பகுதியிலேயே சேகரிக்கப்படுவதாலேயே இந்நிலை ஏற்படுகிறது. இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், தாம் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே ஐம்பது சதவீதமான மக்கள் வாழ்ந்து வருவதுதான்.

ஏனெனில், நீரிழிவு அவ்வளவு சீக்கிரமாக நோய் அறிகுறிகளைக் காட்டுவதில்லை. வேறு ஏதேனும் காரணத்துக்காக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்போதுதான் தாம் ஏற்கனவே நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவருகிறது. இவ்வாறு மிகப் பிந்திய நிலையில் பரிசோதனை செய்துகொள்வதால் பலரும் ‘டய படிக் ரெட்டினோபதி’ மற்றும் ‘நி யூரோபதி’ போன்ற நீரிழிவின் உபரி நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்நோயின் விளைவாக, கண்கள், சிறுநீரகங்கள், இதயம் போன்ற ஏனைய உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

‘ஹைப்பர் டென்ஷன்’ எனப்படும் அதீத இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு ஆகிய இரண்டும் நீரிழிவுக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடியன. அதேநேரம் நீரிழிவானது நரம்புகளைப் பெரிதும் தாக்கும். இதன் மூலம் ஏனைய உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, கண்களின் நரம்புகள் பாதிக்கப்படுவதை ‘ரெட்டினோபதி’ என்கிறோம். இந்தப் பாதிப்பை உணராமல், அல்லது தெரிந்துகொள்ளாமல் போவதால், கண்கள் பார்வை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். அதுபோலவே, மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால், மாரடைப்பு, பக்கவாதம் என்பன உண்டாகலாம். ஒப்பீட்டு ரீதியாக, சாதாரணவர்களைவிட, நீரிழிவு நோயாளர்களுக்கு மாரடைப்பு தோன்றுவதற்கான வாய்ப்புகள் நான்கு மடங்கு அதிகம். மிக முக்கியமாக, உடலில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைச் சத்தை வடிகட்டி வெளியே அனுப்பும் பணியைச் செய்யும் சிறுநீரகங்கள், அளவுக்கு அதிகமாக இயங்க வேண்டி யிருப்பதால், சிறுநீரகங்களும் பாதிக்கப்படுகின்றன.

* பிரசவ காலத்தின் போதும் நீரிழிவு அறிகுறிகள் காணப்படுவதாகச் சொல்கிறார்களே?

இதில் பல வகைகள் உண்டு. இன்றைய காலங்களில், பெண்கள் வயது கூடிய நிலையில் கருத்தரிப்பதனாலும் நீரிழிவு தோன்றலாம். இன்னும் சிலருக்கு, பிரசவத்துக்கு முன்னைய நாட்களில் நீரிழிவு அறிகுறிகள் இருப்பினும், பிரசவத்தின் பின்னர் அவை மறைந்துபோகலாம். மகப்பேறு என்பது, ஒட்டுமொத்த உடலிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு. அதன்போது, இரத்த அழுத்தம் பல்வேறு காரணங்களால் நீரிழிவு அறிகுறி கள் உடலில் தோன்றலாம். ஆயினும் முறையான கண்காணிப்பின் கீழ் அது கட்டுப்படுத்தப்பட்டால், பிரசவகால சிக்கல்களை, எடை கூடிய குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கலாம். ஆனால், பிரசவகால நீரிழிவுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து வருவதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முறையான ஆலோச னைகளைப் பெற்றுக்கொள்ளுமிடத்து இந்நிலை மாறலாம்.

* நீரிழிவு நோய் பற்றிய பரிசோதனைகளுக்கே அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கிறது. இதனால், அனைவரும் இந்தப் பரிசோதனைகளைச் செய்து கொள்வது இயலாத காரியமாக இருக்கிறது. இதற்கு மாற்று வழி ஏதும் இருக்கிறதா?

இருக்கிறது. நீரிழிவு பற்றிய ஆராய்ச்சிப் பிரிவு ஒன்று நமது மருத்துவமனையில் இயங்கிவருகிறது. இதன் மூலம், ‘டயபடிக் ரிஸ்க் ஸ்கோர்’ எனும் ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம், யாராக இருந்தாலும், அவரிடம் ஒரு சில தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம், அவருக்கு நீரிழிவு காணக்கூடிய அல்லது ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம், நீரிழிவு வருமுன்னரே அதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* உடற்பருமனைக் குறைத்துக்கொள்வதற்காகச் செய்யப்படும் ‘பேரியாட்ரிக்’ சத்திர சிகிச்சை மூலம், நீரிழிவை முற்றாக குணப்படுத்திவிடலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறதே, அது உண்மை தானா?

பேரியாட்ரிக் சிகிச்சை நூற்று முப்பது, நூற்றைம்பது கிலோ உடல் எடை உள்ளவர்களுக்கே பரிந்துரைக்கப்படவேண்டும். மிகுந்த பொருட்செலவை உண்டாக்கும் அந்த சிகிச்சையை எல்லோரும் செய்து கொள்ளவும் முடியாது. என்னைப் பொறுத்தவரையில், நீரிழிவை குணப்படுத்த பேரியாட்ரிக் சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியாது.

* நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?

முதலில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக எடுத்துச் செல்லப்படவேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலே நீரிழிவு கட்டுப்பட்டு விடும் என்ற தவறான மனோபாவம் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆயினும், மருந்துக்கு அப்பால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள், உடல் எடை அதிகரிக்காது பார்த்துக்கொள்ளுதல், புகை பிடிப்பதைத் தவிர்த்தல் போன்ற அனேக அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாக அவர்கள் பின்பற்ற வேண்டும்.

* நீரிழிவு நோயாளிகளுக்கு விசேட பாதணிகள் வழங்கப்படுகின்றன. இதன் நோக்கம் என்ன?

‘நியூரோபதி’ மற்றும் ரத்த அழுத்தக் குறைவு காரணமாக, நீரிழிவு நோயாளர்களின் கால்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. இதன்போது, அவர்களது கால்கள் உணர்விழக்கும் வாய்ப்பு அதிகம். உதாரணமாக, சூடான ஒரு இடத்தில் அல்லது தீயில் அவர்களது பாதங்கள் இருந்தாலும், அதை அவர்களால் உணர முடியாது அல்லது மிகத் தாமதமாகவே உணர முடியும். இதனால், அவர்கள் காயப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதைத் தடுப்பதற்காகவே விசேட பாதணிகளை அவர்களுக்கு சிபாரிசு செய்கிறோம். நீரிழிவு நோயாளர்கள் பாதணிகளை வாங்கும்போது சில விடயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும். காதணிகளை மாலை நேரம் வாங்குங்கள். நமது பாதத்தின் அளவை விட ஒரு அலகு கூடிய பாதணிகளை வாங்கவேண்டும். பாதணியின் முன் பகுதி, அதாவது நமது பாதத்தின் முன் பகுதியை இலகுவில் அடக்கிக்கொள்ளக்கூடிய இடவசதி உள்ள பாதணிகளைத் தெரிவுசெ ய்யவேண்டும். ஏனெனில், பாதத்தின் முன் பகுதி அதிகமாக இறுக்கப்படுவதால் பாதத்தில் காயங்கள் தோன்ற வாய்ப்பு உண்டு.

* இந்த நேர்காணல் மூலம் நமது வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னமும் கூடுதலாக அதிகரிக்கவேண்டும். சரியான உணவுப் பழக்கம், சீரான உடற்பயிற்சி, சரியான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் என்பவற்றைத் தொடர்ச்சியாகக் கைக்கொண்டால் இந்நோய் வராமல் அறவே தவிர்க்கலாம்.

சந்திப்பு: ஏ.தேவராஜன்

மேலதிக விபரங்களுக்கு: 0091 97500 35333