சீனாவின் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில்  64 பேர் உயிரிழந்ததோடு 28 பேர் காணாமல் போயிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய இரசாயன தொழிற்சாலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளதோடு 28 பேர் காணாமல் போயுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த விபத்தினால் பொது மக்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கைத்தொழில் பூங்காவிற்கு அருகில், இரசாயனங்கள் தயாரிக்கும் குறித்த தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு ஏற்பட்ட தீ விபத்தினால் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சிலவகை தீப்பற்ற கூடியது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.