தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள திரபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் பௌத்த சமூகத்தின் மத்தியிலும் சர்வதேச ரீதியாகவும் ஆன்மீக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கையாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

வாரியபொல ஸ்ரீ விசுத்தாராம மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தரின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று  பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போன்று அதனுடன் இணைந்ததாக “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை பிரகடனப்படுத்தியது பற்றி பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, வர்த்தக சமூகத்தில் நாளுக்கு நாள் பின்னடைந்து செல்லும் ஆன்மீக பண்பாடுகளை மீண்டும் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பி, நாட்டில் ஆன்மீக அபிவிருத்தியொன்றை ஏற்படுத்துவதற்கு எடுத்த முக்கிய நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையை குறிப்பிட முடியும் என்று தெரிவித்தார்.

திரிபீடகம் மற்றும் பௌத்த தத்துவம் ஆகியன தொடர்பாக நாட்டு மக்களின் அறிவை மேம்படுத்துவதன் மூலம் நல்ல பண்பாடுகளுடன் கூடிய சிறந்ததோர் சமூகத்தை நாட்டில் உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று பிற்பகல் விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தரின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

அதனைத்  தொடர்ந்து திருவுருவச் சிலைக்கு முதலாவது மலர் பூஜையையும் ஜனாதிபதி மேற்கொண்டார்.

அகில இலங்கை அறநெறிப் பாடசாலைகளின் திறமைகளை பாராட்டி பண்டுவஸ்நுவர பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி  பரிசில்களை வழங்கினார்.

புத்தரின் திருவுருவச் சிலையை நிர்மாணித்த சிற்பியான நவரத்ன பண்டாரவுக்கும் ஜனாதிபதி நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்தார்.

மல்வத்து விகாரையின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித நாயக்க தேரர், அஸ்கிரி மகா விகாரையின் அநுநாயக்க தேரர், ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி நாயக்க தேரர் ஆகியோர் நிகழ்விற்கு தலைமை தாங்கியதுடன், அவர்களுக்கும் ஜனாதிபதி நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.

விகாராதிபதி சங்கைக்குரிய கடிஹாரே பேமரத்ன நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.