(ஜெ.அனோஜன்)

12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் திருவிழாவானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சனிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஷிரியாஸ் ஐயர் தல‍ைமையிலான டெல்லி கெப்டல்ஸ், அஸ்வீன் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப், தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபத் ஆகிய எட்டு அணிகள் களமிறங்குகின்றன.

இந் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை , ஐ.பி.எல். போட்டிக்கான முழுமையான லீக் அட்டவணையை அண்மையில் அறிவித்ததுடன் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றின் போட்டி நேர அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது.

இந்தியாவிலுள்ள எட்டு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ள 12 ஆவது ஐ.பி.எல். தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

12 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த 60 போட்டிகளைக் கொண்ட தொடரில் 56 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

லீக் போட்டிகளின் நிறைவில் இறுதிச் சுற்றுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியும் நீக்கல் போட்டியும் இறுதிச் சுற்றுப் போட்டிக்கான 2 ஆவது தகுதிகாண் போட்டியும் இடம்பெற்று 12 ஆவது ஐ.பி.எல். தொடருக்கான இறுதிப் போட்டி இடம்பெறும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வர‍ை இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரின் சாதனைகள் பின்வருமாறு ;

* அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி மும்பை இந்தியன்ஸ் 

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 171 போட்டிகளை எதிர்கொண்டு 97 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

* அதிக தோல்விகளை பதிவு செய்த அணி டெல்லி கெபிடல்ஸ்

டெல்லி கெபிடல்ஸ் அணி இதுவரை 161 போட்டிகளை எதிர்கொண்டு 91 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

* அதிக ஓட்டங்களை பெற்ற அணி ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர்

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின்போது 5 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை குவித்தது.

* குறைந்த ஓட்டங்களை பெற்ற அணி ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர்

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

* அதிகபடியான வெற்றியிலக்கை துரத்தியடித்த அணி (chases) ராஜஸ்தான் ரோயல்ஸ்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை துரத்தி அடித்தது (217).

* குறைந்த வெற்றியிலக்கையும் அடையாது தோல்வியடைந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சப்

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 116 ஓட்டங்களை குவித்தது. 117 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

* அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி மும்பை இந்தியன்ஸ் 

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 145 ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.

* அதிக ஓட்டங்களை விளாசிய வீரர் சுரேஷ் ரய்னா

சுரேஷ் ரய்னா 172 இன்னிங்ஸுக்களில் விளையாடி, 4 ஆயிரத்து 985 ஓட்டங்களை குவித்துள்ளார்.

* ஒரு இன்னிங்ஸில் கூடுதாலான ஓட்டங்களை பெற்ற வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 175 ஓட்டங்களை குவித்தார்.

* அதிக ஆறு ஓட்டங்களை விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 111 இன்னிங்ஸ்களில் விளையாடி 292 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.

*  ஒரு இன்னிங்ஸில் கூடுதலான ஆறு ஓட்டங்களை விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 17 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.

* வேகமாக சதம் விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல் 

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 30 பந்துகளில் சதம் விளாசினார்.

* வேகமாக அரைசதம் விளாசிய வீரர் கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

* துடுப்பாட்ட சராசரியில் முன்னிலையில் உள்ள வீரர் ரஸல்

இவரது சராசரி 177.29 ஆகும்.

* அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர் லசித் மலிங்க

மலிங்க 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 110 இன்னிங்ஸ்களில் விளையாடி 154 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

* ஒரு இன்னிங்ஸில் குறைந்த ஓட்டங்களை கொடுத்து அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் சொஹைல் தன்வீர் 

கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தன்வீர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 14 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

* பந்து வீச்சு சராசரியில் முன்னிலையில் உள்ள வீரர் ஆண்ட்ரூ டை

2017 - 2018 காலப் பகுதியில் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆண்ட்ரூ டை மொத்தமாக 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது சராசரி 16.36 ஆகும்.

* அதிக ஓட்டமற்ற பந்து வீச்சுக்களை (Dot ball) பரிமாற்றிய வீரர் ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் 145 போட்டிகளில் பந்து வீசி ஆயிரத்து 128 பந்துளுக்கு எவ்வித ஓட்டமும் வழங்காது கட்டுப்படுத்தியுள்ளார்.

* அதிக ஓட்டமற்ற ஓவர்களுக்காக (maiden over)பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட வீரர் பிரவின் குமார்

பிரவின் குமார் 119 போட்டிகளில் விளையாடி பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அவர், மொத்தமாக 14 ஓவர்களுக்கு ஓட்டங்கள் வழங்காது கட்டுப்படுத்தியுள்ளார்.

* முதல் ஹெட்ரிக் எடுத்த வீரர் பாலஜி

சென்னை அணிக்காக விளையாடிய பாலாஜி கடந்த 2008 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியுடனான போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை அடுத்தடுத்து வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

* அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரர் சுரேஷ் ரய்னா

சுரேஷ் ரய்னா 95 பிடியெடுப்புக்களை எடுத்துள்ளார்.