தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பாதுகாக்குமாறு தேரவாத பௌத்த நாடுகளுடன் கூட்டிணைந்து இலங்கை, யுனெஸ்கோ அமைப்பிற்கு முன்வைக்கும் முன்மொழிவை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைப்பதனை முன்னிட்டு தேசிய  நிகழ்வொன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களின் தலைமையில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன பங்குபற்றலில் கண்டி தலாதா மாளிகை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

உன்னத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி  அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அதனைத் தொடர்ந்து திரிபீடகத்தை இன்னும்  பல்லாயிரக் கணக்கான வருடங்கள் பாதுகாத்து உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வை முன்னிட்டு கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதி “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு சமய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திரிபீடகத்தின் மகிமை பற்றியும் ஆன்மீகத்துடன் கூடிய சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் பௌத்த தத்துவம் பற்றியும் பாடசாலை பிள்ளைகளுக்கும் மக்களுக்கும் தெளிவூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சமய கிரியைகளும் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டன.

நாளை இடம்பெறும் தேசிய நிகழ்வு மூன்று நிக்காயாக்களின் மகாசங்கத்தினரின் தலைமையில் தேரவாத பௌத்த நாடுகளைச் சேர்ந்த மகாசங்கத்தினர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர தூதுவர் ஹானா சிங்கர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகளும் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுபிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.