கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று  புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

"நாட்டுக்காக ஒன்றினைவோம்" புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் நிறைவு விழா மற்றும் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கேட்போர் கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,இன்று புத்தளம் நகருக்கு விஜயம் செய்தார்.

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கோரி புத்தளத்தில் நீண்ட காலமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயத்தில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சர்வமத குழு மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பினருக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்தும், இன்றைய தினம் புத்தளத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சர்வமத குழு உள்ளிட்டோருக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறும் கோரியே இந்த கறுப்புக் கொடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் , இளைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில், காலை 8.30 மணிக்கு ஒன்று௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், குப்பைக்கு எதிரான பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு, குப்பைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

.