ரூபாவின் பெறுமதியை அடுத்த மாதம் முதல் நிலையாக வைத்திருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மூலமான நிதிவசதிகள் மற்றும் ஜப்பான் கடனுதவியின் கீழ் ரூபாவின் மதிப்பை நிலையாகப் பேணுவதற்கு முடியுமென அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இன்றையளவில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 148 ரூபாவாக அதிகரித்துள்ளது. ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு அரசமட்டத்தில் செயற்கையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் ரூபாவின் பெறுமதியை தளம்பல் நிலைக்கு விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதத்துக்குள் ரூபாவின் பெறுமதியை நிலையான மட்டத்தில் வைத்திருக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்த நிலையிலும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 22.8சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் 584,818 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இவர்களில் அதிகளவாக 46சதவீதத்தினர் சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்து 32 சதவீதத்தினரும் மற்றும் மேற்கு ஐரோப்பாவிலிருந்து 22.6சதவீதத்தினரும் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாத்துறை அமைச்சு பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.