(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விஷமில்லாத விவசாயத்தை  உருவாக்கும் ஜனாதிபதி வேட்பாளரை  நிறுத்துவோம். அதுவே எமது இலக்காகும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.  

இம்மாதம்  30 ஆம் திகதி விவசாய புரட்சிக்கான போராட்டத்தை நாம் செய்யவுள்ளோம். இந்த நிகழ்வுக்கு இலட்சக் கணக்கான பொதுமக்கள் இணையவுள்ளனர்.

எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் விஷமற்ற விவசாய கொள்கை கொண்ட ஜனாதிபதியே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார். அதற்கான புரட்சியை நாம் ஆரம்பிப்போம்.

இலங்கையில் விவசாய மாற்றத்தை செய்ய வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு உரங்களை கொடுக்காமல் அவர்களுக்கு பணத்தை கொடுங்கள். அவர்கள்  இயற்கை உரத்தை உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதை செய்ய முடியுமானால் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் ரூபா பெறுமதியான உர செலவை குறைக்க  முடியும். 

இன்று இலங்கையில் பயன்படுத்தும் உரங்கள் மூலமாக 15 ஆயிரம் சிறுநீரக நோயாளர் உருவாகியுள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு அப்போது 5 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த ஆண்டு 15 ஆயிரம் பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே ஆட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லை. எதிர்க் கட்சியினரும் தமது அரசியலை மட்டுமே கருத்தில்கொண்டு செயற்பட்டு வருகின்றனர். ஆகவே அரசியலுக்கு அப்பால் நாம் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும். 

பாராளுமன்றத்தில்  இன்று வெள்ளிக்கிழமை இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்தொழில் மற்றும் நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.