(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வில்பத்து வனப்பாதுகாப்பு பகுதி நில ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காடளிப்புடன் நானோ எனது முஸ்லிம் மக்களோ தொடர்பில்லாதவர்கள்.  காடுகளை கைப்பற்றியுள்ளேன் என ஆதராபூர்வமாக நிரூபிக்க முடியுமானால் தண்டனையை பெற்றுக்கொள்ள நான் தயாரென அமைச்சர் ரிஷாத் சபையில் தெரிவித்தார். 

இன்று, வெள்ளிக்கிழமை பாராளுமன்ற சபை அமர்வுகளின் போது ,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக , புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தை சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு விற்க நடவடிக்கை எடுப்பதாகவும், வில்பத்து வனப்பிரதேசத்தை அழித்துவருவதாக பிரதான இரண்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து சபையில் கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதில் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், புல்மோட்டை கணியமணல் கூட்டுத்தாபனத்தை நான் பொறுப்பேற்கும் போது 300 மில்லியன் ரூபாவே நிலையான வைப்பில் இருந்தது. இன்று 3000 மில்லியன் ரூபாவாக அதனை அதிகரித்துள்ளோம்.

அதேபோல் இந்த நிறுவனம் ஒருபோதும் தனியார் நிறுவனங்களுக்கு விற்க நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சரவையில் கூட அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும் மணல் சார்  சில உட்பத்திகளுக்கு அந்த பகுதியில் இடம் மாத்திரம் ஒதுக்கித்தரப்படும், ஆர்வமுள்ள நிறுவனங்கள் வரலாம் என அமைச்சரவை அங்கீகாரத்துடன் அறிவித்தல் விடுத்தோம். இது குறித்து சந்தேகம்கொள்ளை தேவையில்லை என கூறினார்.

மேலும், வில்பத்து  வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக கூறும் காரணிகள் பொய்யானது. 2012 ஆம் ஆண்டுதான் வடக்குக்கு முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்பட்டனர். அப்போது எந்த தவறும் இடம்பெறவில்லை. அதேபோல் வில்பத்து பிரதேசம்  மன்னார்  மாவட்டத்தில் உள்வாங்கப்படாது எனவும், இது அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ்தான் அப்போதில் இருந்து உள்ளது. 2012 ஆம் ஆண்டு இது வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது எனவும் தெரிவித்தார்.