(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இம்முறையும் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் 40/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளதன் மூலமாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கும் நிலைப்பாட்டினை ஆதரித்துள்ளது.

மூன்று  தடவைகள் சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்து கைச்சாதிடப்பட்டுள்ள பிரேரணையை  அரசாங்கம் ஒருபோதும் நிராகரிக்க முடியாது.

இப்போதாவது சர்வதேச தரப்பிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் நாம் மீண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை  நாடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில்  அரசாங்க தரப்பிடம் வலியுறுத்தினார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்தொழில் மற்றும் நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில்,

இம்முறை இணை அனுசரணை வழங்கியதன் மூலமாக மொத்தமாக மூன்று தடவைகள் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச தரப்பு அவ்வப்போது சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என கூறுகின்றனர்.அது பொய்யான கருத்தாகும். 

இம்முறையும் இலங்கை அரசாங்கம் 40/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளதன் மூலமாக சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கும் நிலைப்பாட்டினை ஆதரித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நீதிமன்ற பொறிமுறைக்கு இணங்குகின்றோம் என மூன்றாவது தடவையாகவும்  உறுதியளித்துள்ளது. எனினும் வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் பிரேரணையை எதிர்ப்பதாக கூறிவிட்டு அதே பிரேரணைக்கு கைச்சாத்திட்டுள்ளார். ஆகவே இப்போது மூன்று தடவையும் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டது. 

ஆகவே இப்போதாவது சுயாதீனமான விசாரணைகளை நடத்தி  உண்மைகளை கண்டறியாது போனால் நாம் தமிழர் தரப்பு என்ற ரீதியில் சர்வதேச பொறிமுறையை நாடுவோம். எமக்கு இதனை தவிர மாற்று வழிமுறை இல்லை. இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொண்டு சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும், கலப்பு முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும், இல்லையேல் நாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.