(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

வெளிநாடுகளில் இருந்து உணவு வகைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தி அந்த உணவு வகைகளை நாங்கள் உற்பத்திசெய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்படும் அதிகமான உணவுவகைகள் ஆராேக்கியமானதல்ல. அத்துடன் இதன் மூலம் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்வதுடன் நாட்டின் அந்நிய செலாவணியையும் பாதுகாத்துக்கொள்ளலாம் முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாயத்துறையும் கடற்றொழில் துறையையும் அபிவிருத்து செய்வதன் மூலம் நாட்டுக்கு அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த இரண்டு துறைகளையும் அபிவிருத்தி செய்யாமல் வேறு எந்த துறைகளை அபிவிருத்தி செய்தாலும் நாங்கள் எதிர்பார்க்கும் நன்மையை அடையமுடியாது. 

அரிசி வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதை முற்றாக நிறுத்தவேண்டும். அதன் மூலம் எமது விவசாயிகளை பலப்படுத்தலாம். இல்லாவிட்டால் விவசாயிகள் வயல் செய்கையில் இருந்து ஒதுங்கிக்கொள்வார்கள். 

அத்துடன் அரிசி விலைக்கு வாங்கும் வேலைத்திட்டத்தை ஊக்குவிக்கவேண்டும். அரசி மாபியா இடம்பெறுமானால் அதில் அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளை பாதுகாக்க முன்வரவேண்டும்.  தோட்ட மக்கள் கோதுமை மாவுக்கு பழக்கப்பட்டவர்கள். அவர்களை அரிசி உபயோகத்துக்கு மாற்ற வேண்டும்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டத்தின் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சு  மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.