அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக வில்பத்து காடழிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்காக நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இரண்டு பேரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மனுவின் நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை தொடர்ந்து அழித்து கொண்டிருப்பதாக மனுதாரர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்படடுள்ளது. 

இதன்காரணமாக மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் சார்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.