தேர்தலில், தந்தையை எதிர்த்து மகனும், அண்ணனை எதிர்த்து தம்பியும் ஒரே தொகுதியில் போட்டியிடுவது குறித்த செய்திகள் அவ்வபோது வெளிவந்து ஆச்சரியத்தை உண்டாக்கும். அந்த வகையில் தற்போது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் தந்தையும் மகளும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், மலைவாழ் பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கேபினட் அமைச்சராக இருந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த 72 வயதுடைய கிஷோர் சந்திரதேவ்,சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 

6 முறை எம்.பி. பதவி வகித்த இவர், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் ஐக்கியமானார். இவருக்கு, விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என யோசித்த காங்கிரஸ் மேலிடம், இத்தனை நாட்கள் கிஷோர் சந்திரதேவுக்கு அரசியலில் உறுதுணையாக இருந்த அவருடைய மகளும், சமூக சேவகியுமான ஸ்ருதி தேவியை அரக்கு லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கியது.

கிஷோர் சந்திர தேவின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட ஸ்ருதி தேவி, தற்போது அவரையே எதிர்த்து போட்டியிடுவதால், இந்தத் தொகுதியின் வெற்றி யார் பக்கம் என்ற எதிர்ப்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.