அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘தளபதி 63’ என்ற படத்தில் பொலிவூட்டின் மூத்த நடிகரான ஜேக்கி ஷெராப் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவான ‘ஆரண்ய காண்டம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பொலிவூட் நடிகர் ஜேக்கி ஷெராப்.  இவர் அப்படத்தைத் தொடர்ந்து முப்பரிமாணம், மாயவன் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது தயாரிப்பில் இருக்கும் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் உருவாகும் ‘பாண்டி முனி’ என்ற படத்திலும், அகோரி என்ற படத்திலும், விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் ‘வால்டர்’ என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 63’ படத்தில் வில்லன் கேரக்டர்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதனிடையே ‘தளபதி 63’ என்ற படத்தில் தளபதி விஜய் உதைப்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார் என்பதும், அப்படத்தில் நடிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ பட புகழ் கதிருக்கு ஜோடியாக ‘ஜருகண்டி’ பட புகழ் நடிகை ரெபா மோனிகா ஜோன் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.