பேருவளை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திசெல்லும் நோக்குடன் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேருவளைக்கு வருகை தந்த குறித்த நபர் அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்காகவே அவர் பேருவளையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து குடு எனப்படும் போதைப்பொருள் 3 கிராம், 5 கிராம் ஐஸ், ஹஷீஷ் 15 கிராம் மற்றும் டிஜிட்டல் தராசு ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.