(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட புதிய 40-1 என்ற பிரேரணை  இன்று வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இன்று மாலை ஜெனிவா நேரப்படி  3 மணியளவில் இலங்கை  தொடர்பான பிரேரணையை  நிறைவேற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 

அப்போது   47 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும்     மனித உரிமை பேரவையில் பிசன்னமாகியிருந்தனர். 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தலைவர் தலைமையில்  பிரேரணையை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்ற நிலையில்  இலங்கையின்  சார்பில்  அமைச்சர் திலக் மாரப்பன  தலைமையிலான  பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இதன்போது பிரிட்டன்  பிரதிநிதி   உரையாற்றினார். அத்துடன்    அமைச்சர் திலக் மாரப்பனவும்    உரையாற்றினார்.   தொடர்ந்து  பிரேரணையை  வாக்கெடுப்புக்கு விடுவதா அல்லது    ஏகமனதாக நிறைவேற்றுவதா என மனித உரிமை பேரவையின் தலைவர் வினவினார். 

இதன்போது எந்தவொரு நாடும் எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணமாக    இலங்கை குறித்த பிரேரணை  வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.