பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு தொடக்கம் பெண் பிள்ளைகளுக்கான பலவித ஊக்குவிப்புகள் வரை பயனுறுதியுடைய சமூக நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிவந்திருக்கிறது. 

ஆனால், லோக்சபா தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்வைத்திருக்கும் விஞ்ஞாபனங்கள் ஏமாற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன.

இரு கட்சிகளுமே முன்னைய திட்டங்களை திரும்பத்திரும்ப கூறியிருக்கின்ற அதேவேளை, மத்திய அரசின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் பல முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதாதாக இரு கட்சிகளும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யவேண்டுமென்று கோரி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமொன்று ஏகமனதாக ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. ஆனால், மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற மாநில ஆளுநர் தான் இது தொடர்பிலான அரசியல் தீர்மானத்தை எடுக்கவேண்டியவராக இருக்கிறார். இரு கட்சிகளுமே புதுச்சேரியை தற்போதைய யூனியன் பிரதேச அந்தஸ்திலிருந்து ஒரு மாநிலமாக்குவதாக உறுதியளித்திருக்கின்றன ; ஆனால், அத்தகைய ஒரு மாற்றத்தை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது.

இரு விஞ்ஞாபனங்களுமே இலங்கை தமிழர்களின் அவலநிலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியளித்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடனான அரசாங்கமொன்று மத்தியில் பதவிக்கு வந்தாலும் கூட, அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது பற்றிய யோசனையை நடைமுறைப்படுத்துவது சுலபமானதாக இருக்கப்போவதில்லை. 8 இலட்சம் ரூபா வரைக்கும் வருமானவரியில் இருந்து விலக்களிக்கப்போவதாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் கூறியிருக்கிறது.இது மாநில அரசாங்கம் எடுக்கவோ, நடைமுறைப்படுத்தவோ கூடிய ஒரு தீர்மானமல்ல.

எவ்வாறெனினும், விஞ்ஞாபனங்களில் உள்ள பொதுப்படையான பல யோசனைகள் மாநில மக்களைக் கவரக்கூடியவையாக இருக்கலாம். உதாரணமாக, மாநிலங்களுக்கிடையே நதிகளை இணைப்பது தொடர்பான யோசனையை சொல்லலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் வங்கிக் கணக்கிற்கு மாதாந்தம் 1,500 ரூபாவை வைப்புச்செய்யப்போவதாக ஆண்ணா தி.மு.க. ஒரு உறுதிமொழியை வழங்கியிருக்கிறது.குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 8, 000 ரூபாவாக நிர்ணயிக்கப்போவதாக தி.மு.க. கூறுகிறது. அடிப்படைச் சம்பளம் நாடுபூராவும் ஒரேமாதிரியானதாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கை ஆரவாரமாக முன்வைக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் மாநில கட்சிகள் இந்த விடயத்தில் முந்திக்கொண்டுள்ளன.விவசாயத்துக்கென்று தனியான பட்ஜெட் அல்லது மீன்பிடிக்கென்று தனியான அமைச்சு போன்ற ஏனைய வாக்குறுதிகள் வாக்காளர்களினால் விரும்பப்படக்கூடும்.

கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பது அரிது ;  வேட்பாளர்களின் ஆளுமை, சாதி, மதம் மற்றும் பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்குகள் அளிக்கப்படுகின்றனன்று அரசியல் அவதானிகள் கூறலாம் எனகின்ற அதேவேளை,  வாக்காளர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கூடுதல் பங்கைக்கொண்ட மத்திக்கும் மாநிலங்களுக்கும் இடையே  தோன்ற  ஆரம்பித்திருக்கின்ற வெடிப்புக்களை பிரதான திராவிட கட்சிகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

  (இந்துஸ்தான் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கம், 20, மார்ச் 20019 )