தமிழகத்தை காக்க ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லாததால் தி.மு.க.வில் இணைந்தேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கலைராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, 

“திராவிட இயக்கம் பட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து உருவாக்கிய தி.மு.க. தழைத்து விளங்க தகுதியான தலைமை மு.க. ஸ்டாலின் தான். இழந்துவிட்ட தமிழர்களின் உரிமைகளை மீண்டும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் ஸ்டாலின் தலைமையை ஏற்று தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.

பிரதமர் மோடி, பா.ஜ.க. குறித்து கொஞ்சமும் அஞ்சாமல், என்ன விளைவுகள் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்னும் அடிப்படையில் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பது தலையாய பணி என்று நினைப்பவர் ஸ்டாலின், ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டதில் பெருமை மகிழ்ச்சி, அவர் சுட்டுவிரல் நீட்டினால் சிட்டாக பறந்து எந்த பணியானாலும் அதனை நிச்சயமாக செய்து முடிப்பேன், ரி ரி வி தினகரனுடன் முரண்பாடு எல்லாம் ஒன்று கிடையாது.

திராவிட இயக்கத்துக்கு மிகப்பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மதவாதக் கும்பல் இன்று உள்ளது. தமிழகத்தை காக்க ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லாததால் தி.மு.க.வில் இணைந்தேன்.” என்றார்.

முன்னதாக  இன்று திருச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருடன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜியும் உடனிருந்தார். இதனிடையே சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இடம் கிடைக்காததால் ராஜ கண்ணப்பன் தி.மு.க.வில் இணைந்து, ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.