கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும்,  கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். 

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில்,

“நெடுநல்வாடை’ என்ற இந்த படத்தின் தலைப்பிற்காகவே இயக்குனருக்கு தமிழ் இலக்கிய உலகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மொழி பேசும் போதும், புழங்கும் போது தான் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட நெடுநல்வாடையை இன்றைய டிஜிற்றல் யுகத்தில் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பாக்கி அதனை மீண்டும் உயிருள்ளதாக ஆக்கியதற்காக இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கி ராஜநாராயணன் போலவோ, ஜெயகாந்தன் போலவோ, புதுமைப்பித்தன் போலவோ, தி ஜானகிராமன் போலவோ முழுநேர நாவலாசிரியரோ அல்லது சிறுகதை ஆசிரியனும் அல்ல. அடிப்படையில் நான் ஒரு கவிஞன். பாட்டு எழுதுவதில் சுகம் காண்பவன்.  பாடல் எழுதுவதில் இலாபம் காண்பவன்.

தமிழ் திரைப்பட பாடல்கள் சற்று தொய்வடைந்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு படத்தில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கிறது .எண்ணிக்கை குறைந்தாலும் பரவாயில்லை எண்ணங்கள் குறையாத பாடல்கள் வேண்டுமே என்பதுதான் என் போன்ற தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திரைப்படப் பாடல்கள், தமிழர்களுக்கு கவிதை செய்யும் வேலையை மாறுவேடமிட்டு செய்து கொண்டிருக்கிறது.

தமிழாற்றுப்படை யை நான் இன்றுடன் நிறைவு செய்து இருக்கிறேன். தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், இளங்கோ, கம்பர், திருவள்ளுவர், ஆண்டாள் ,அப்பர், திருமூலர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், அண்ணா என இந்த வரிசையில் கடைசியாக பெரியாரை பற்றி தமிழாற்றுப்படை கட்டுரையுடன் நிறைவு செய்கிறேன்.

பெரியாரை பற்றிய தமிழாற்றுப்படை, மே மாதம் 5ஆம் திகதி திருச்சியில் அரங்கேற்றுகிறேன். அத்துடன் தமிழாற்றுப்படையின் ஒரு பெரும் பணி தற்காலிகமாக நிறைவடைகிறது. இது நூலாக ஜூலை 12ஆம் திகதி அன்று வெளியாகிறது. இனி முழுக்க தமிழ் திரையுலகில் பாடல்களை எழுதுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எம்மை தயாராக் வைத்துக் கொண்டிருக்கிறேன். இளம் இயக்குனர்கள் இளம் படைப்பாளிகள் இளம் இசையமைப்பாளர்கள் என்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.