சிறுநீரக நோய் பரவியுள்ள பிரதேசங்களில் நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை அமைக்கும் சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டத்தின் கீழ் இசுறுமுனிய ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 600 ஆவது நீர் சுத்திகரிப்புத் தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

இன்று முற்பகல் இசுறுமுனிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து விகாரையின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

வாரியபொல ஸ்ரீ சுமங்கல விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய துமுல்லே சீலகந்த நாயக்க தேரர், தந்திரிமலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய தந்திரிமலே சந்திர ரத்தன நாயக்க தேரர், இசுறு முனிய ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய மதவ சுமங்கல நாயக்கர் தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் ஆசி வேண்டி இதன்போது பிரித்பாராயணம் செய்தனர்.

இசுறு முனிய ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய மதவ சுமங்கல நாயக்க தேரரினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் இதன்போது வழங்கப்பட்டது.