(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

இலங்கை அரசாங்கமானது வெறுமனே கடமைக்காவே ஐ. நா.  மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்பாடலை பேணுகிறதே தவிர, பொறுப்புக்கூறல் தொடர்பில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இன்று ஜெனிவாவில் தெரிவித்தார். 

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய தினம் விடயம் இரண்டின்  கீழ் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை மீதான இடையீட்டு விவாதத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் எழுப்பிய கேள்வியிலேயே இதனை தெரிவித்தார். 

குற்றவியல் பொறுப்புக்கூறலை கோரி போராடி வரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இலங்கையின் பிரதமர் அக்குற்றங்களை மன்னித்து மறந்துவிடுமாறு வெளிப்படையாகக்கோரியுள்ளார். இலங்கை அரசின் உயர் மட்ட தலைவர்கள் குற்றவியல் பொறுப்புக்கூறலை தொடர்ந்தும் ஒருமனதாக நிராகரித்து வரும் நிலையில் ஐ. நா மனித உரிமைகள் பேரவையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இந்த அடிப்படை அபிலாசையை நிறைவேற்ற முடியாது என தெட்டத் தெளிவாக புலப்படுகிறது.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் அல்லது இலங்கைக்கான விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவதன் மூலம் மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான குற்றவியல் நீதியை நிலை நாட்டலாம் என்பதை ஆணையாளர் ஏற்றுக் கொள்வாரா? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பனார்.