(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் உண்மையில் அத்தகைய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் முக்கிய குற்றவாளியை சூட்சமமான முறையில் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில், 

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மத்திய வங்கியில் பிணைமுறி மோசடி இடம்பெற்றது.  இம்மோசடியின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை நாட்டுமக்கள் நன்கு அறிவார்கள். 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரத்தில் முழுமையான பொறுப்புக்களை ஏற்பதாக குறிப்பிட்ட  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பொறுப்புக்களில் இருந்து முழுமையாக விலகியுள்ளமையானது பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிணைமுறி மோசடிகளுக்குத் தீர்வுகாண   நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தற்போது பயனற்றதாகிவிட்டது.  குறித்த அறிக்கையில் முக்கிய குற்றவாளி மிக நுட்பமான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளார். 

ஆகவே  பிணைமுறி மோசடிக்கு ஒரு தீர்வைப் பெறவேண்டுமாயின் முறையான  மீள்பரிசீலனைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.