இன்றைய நிலையில் எம்முடைய பிள்ளைகளின் கைகளில் ஸ்மார்ட் தொலைபேசியும்,  காதுகளில் இயர் போனும் மாட்டிக் கொண்டு உலா வருவதை காண்கிறோம். 

இதனால் அவர்களுக்கு காது கேளாமை ஏற்படக்கூடும் என்றும், தொடர்ச்சியாக ஆறு மணித்தியாலத்திற்கு மேல் ஸ்மார்ட்ஸ்மார்ட் தொலைபேசியில் மூழ்கினாலோ அல்லது அதிலுள்ள வீடியோ கேம்ஸை விளையாடினாலோ அவர்களின் மூளைத்திறன் அதாவது மூளையின் செயல்பாட்டுத் திறன் பாதிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

முதலில் இயர்போன் மாட்டிக்கொண்டு என்னுடைய பிள்ளைகள், வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்வதற்கான பயணத்திலும், பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வருவதற்கான பயணநேரத்திலும், வீட்டிலிருந்து மீண்டும் மேலதிக  வகுப்பிற்கு செல்லும் காலகட்டத்திலும், விடுமுறை தினங்களிலும், ஓய்வு நேரங்களிலும் காதுகளில் இயர் போனை மாட்டிக் கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை பெற்றோர்களாகிய எம்மால் தடுக்க முடிவதில்லை. 

அதன் ஒலி அளவு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவை காட்டிலும் அதிகமாக இருப்பதையும் காண்கிறோம். அதிலும் அவர்கள் பயண நேரங்களில் பேசும்பொழுது, கேட்கும்பொழுது ஒலியின் அளவு அதிகமாக இருப்பதையும் காண்கிறோம். மருத்துவத்துறையில் பரிந்துரையின்படி 100 டெசிபல் ஒலியில் 15 நிமிடங்களுக்கு மேல் இயர்போனை பயன்படுத்தினால் அது செவித்திறன் இழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதேபோல் இயர்போனை பயன்படுத்தும் போது 60 சதவீத டெசிபல் ஒலி அளவிற்கு உள்ளாகவே பயன்படுத்த வேண்டும் என்றும், 30 நிமிட இடைவெளியில், ஒரு முறை ஐந்து நிமிட கால அளவிற்கு ஓய்வு வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதே போல் நம்முடைய பிள்ளைகள் ஸ்மார்ட் தொலைபேசியில் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தால், குறிப்பாக விடுமுறை நாட்களிலும் 6 மணித்தியாலத்திற்கு மேல் அதில் செலவழித்தால், அவர்களின் மூளை திறன், சிந்திக்கும் திறன், மூளை செயல்பாட்டு திறன் ஆகியவை பாதிக்கப்படுவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளின் இத்தகைய இலத்திரனியல் பயன்பாட்டை அதாவது ஸ்மார்ட் போன் மற்றும் இயர் போன் பயன்பாட்டை  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.