தமிழகத்தின் தர்மபுரி லோக்சபா தொகுதியில், கின்னஸ் சாதனைக்காக 200வது முறையாக இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன் (61). இவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் அங்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ தொகுதியிலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து ஆந்திர மாநிலத்தின் நந்தியால் தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிட்டு அகில இந்திய அளவில் இவர் பிரபலமடைந்தார்.

‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் இவர், இதுவரை 199 முறை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், 200 வது முறையாக இன்று (19ம் திகதி) தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்காக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மலர்விழியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பத்மராஜன், “இதுவரை 199 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்; ஆனால், வெற்றி பெற்றதே கிடையாது. தேர்தலில் எல்லோரும் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே நான் செலவு செய்து போட்டியிடுகிறேன். 

இந்தியாவில் நடைபெறும் ஜனாதிபதி, லோக்சபா, சட்டமன்றம், கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து தேர்தலில்களிலும் போட்டியிட்டுள்ளேன். தற்போது, 200வது முறையாக தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளேன்” என்றார்.