(ஆர்.விதுஷா)

தம்புள்ளை - கண்டலம வாவியில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த இளைஞன் நேற்று  தனது நண்பர்கள் நால்வருடன் பிற்பகல் 4.30 மணியளவில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தம்புள்ளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதற்கமைய 21 வயதுடைய இரத்தினபுரி பகுதியை சேர்ந்த சனத் சேனாரத்ன எனப்படுபவரே இவ்வாறு காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது. இதே வேளை நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞனை தேடும் பணிகளை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து மேற்கொண்டனர். 

இந்நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் நேற்று பிற்பகல் 6.30மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் ,பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து , அவர் நீரில் , மூழ்கியமையின் காரணமாக ஏற்பட்ட மூச்சு திணறலின் காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.