(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம் )

இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அனுமதி இல்லாது சர்வதேச உடன்படிக்கை ஒன்றின் இணை அனுசரணையை அங்கீகரிக்க முடியாது என்ற விதப்புரை இருந்தும், ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்காத போதும் அவற்றை தாண்டி ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் புதிய பிரேரணைக்கு அரசங்கம் இணை அனுசரணை வழங்கியது எவ்வாறு என சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

 

இன்று இலங்கைக்கு எதிராக சர்வதேச தலையீடுகள் அதிகரித்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரங்கள்  இந்த தினங்களில் ஆராயப்பட்டு வருகின்றது. அவ்வாறு இருக்கையில் இலங்கையில் சகவாழ்வு, நல்லிணக்கத்தை உருவாக்க தேசிய வேலைத்திட்டம் இல்லை என கூறுவதும் வெறுப்புணர்வுகளை தடுக்கும் சட்டங்கள் இலங்கை சட்டக்கோவையில் இல்லை என கூறுவதும் சர்வதேசத்திற்கு நாமே வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் அமையும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.