பாடசாலையில் பயிலும் மாணவர்கள் முதல் அலுவலகத்தில் பணியாற்றும் 60 வயது வரையிலானர்கள் வரை கணினியினை தொடர்ச்சியாக பார்த்து பணியாற்றி வருகிறார்கள். 

அத்துடன் பணிச்சுமையின் காரணமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாகவும், தங்களது ஆரோக்கியம் குறித்து கவலைப்படாமல் இவர்கள் தீவிரமாக வேலையில் கவனம் செலுத்தி பணியாற்றுகிறார்கள். 

இதன் காரணமாக இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு மன அழுத்தம்  Central Serous Retinopathy பாதிப்பாக வெளிப்படுகிறது.

இந்த பாதிப்பின் போது விழித்திரையின் அடியில் நிணநீர் கசிந்து ஓரிடத்தில் சேர்ந்து விடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு வைத்திய ரீதியான காரணம் கண்டறியப்படவில்லை என்றாலும், மன அழுத்தமே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது, 

இந்த பிரச்சனை தொடக்க நிலையில் கண்டறிந்தால், பக்கவிளைவுகளை தவிர்த்து குணப்படுத்த முடியும். ஆனால் இந்த பாதிப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது என்பதால் கண்களில் அதாவது பார்வையில் ஏதேனும் சிறிய அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் கூட, அதன் அலட்சியப்படுத்தாமல் உடனே கவனம் செலுத்தி கண் வைத்தியரிடம் கலந்து ஆலோசனை செய்து, சிகிச்சை பெற்றுக் கொள்வது நலம். இதனை தவிர்த்தால் விழித்திரை பிரிதல் என்ற பக்கவாட்டு விளைவு ஏற்பட்டு பார்வை திறன் பாதிக்கப்படலாம்.

சிலருக்கு இதன் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சொட்டு மருந்து போட வேண்டியது இருக்கும். சிலருக்கு லேசர் சிகிச்சை அவசியப்படலாம். மன அழுத்தம் இல்லை என்றால் சிலர் நீண்ட நாட்களாக அதிகம் ஸ்டீராய்ட் கலந்த வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் இத்தகைய பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

இருப்பினும் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால், கண்களை பாதுகாக்க முடியும் என்பது உறுதி. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் நீர் அழுத்த உயர்வு பெரும்பாலும் ஏற்படும் என்பதால். அவர்கள் ஆண்டுதோறும் தவறாமல் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

டொக்டர் பிரசாந்த்

தொகுப்பு அனுஷா