பெண் விடுதலை மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, நாடு முழுவதும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கோவையைச் சேர்ந்த பெண், கன்னியாகுமரி சென்றுள்ளார்.

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த சங்கீதா ஸ்ரீதர் (52). ஒமன் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய இவர், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாடு திரும்பி. தற்போது இவர், இந்தியாவின் பெண் விடுதலை மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் காரில் தனியாக சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மும்பையில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 32 மாநிலங்கள் வழியாக சுமார் 42 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, நேற்று முன்தினம் (17ம் தேதி) இரவு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு வந்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது; “நாட்டில், பெண்களின் பாதுகாப்பு, காந்திய கொள்கை, துாய்மை இந்தியா உள்ளிட்டவைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் விழிப்புணர்வு பயணம் செய்து வருகிறேன். இதுவரை, மூன்று லட்சம் பெண்களை சந்தித்துள்ளேன். இந்த பயணத்தை ஏப்ரல் 7ம் தேதி மும்பையில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளேன். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பிரச்னையை பார்க்கும்போது, பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர்த்துகிறது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவியரிடம், பெற்றோர், நண்பர்களாக பழக வேண்டும். மாணவ பருவத்தில் இருப்பவர்கள், மொபைல் போன் பயன்படுத்துவதை குறைத்து, நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். யோகா, தியானம் போன்றவற்றை பின்பற்றினாலே எந்த பிரச்னையையும் எதிர்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்.