மாத்தளை - லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல - வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விகாரையின் தலைமை தேரரால் தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குறித்த விகாரையின் நீர்த்தாங்கிக்கு அருகில் குறித்த துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஆயுதங்களில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 கைத்துப்பாக்கிகளும் மீடகப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆயுதங்கள் கடந்த 14ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் துப்பாக்கிகள் திருடப்பட்ட சமயத்தில் கடமையிலிருந்த பொலிஸார் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.