வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றின் பின்னாலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலங்குளம் கிராமத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சின்னையா சுப்பிரமணியம் என்பவரின் சடலமே இன்று செவ்வாய்க்கிழமை 19 மீட்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழை 17 அவர் சில நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று திங்கட்கிழமை 18 பகல் வீடு திரும்பியிருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தனது கணவர் சில நபர்களால் தாக்கப்பட்டது குறித்து தான் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியிருந்தவர் தனது வீட்டின் பின் வளவிலுள்ள அத்தி மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார் சம்பவம் பற்றிய மேலதிக புலன் விசாரணைகளைத் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.