“கொவிஜன அபிமன் - 2018” ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கமநல அபிவிருத்தி பற்றிய திறன் மிக்கவர்களுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருது விழா முதன்முறையாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள மூலோபாய திட்டமானது, விவசாய நிலங்களை ஒன்றிணைத்து உயர்ந்தபட்ச பயனை பெற்றுக்கொள்வதற்காக இத்துறை சார்ந்த ஒட்டுமொத்த மனித வளத்தையும் ஊக்குவித்து உத்வேகத்துடன் திட்டமிட்ட அபிவிருத்தியை நோக்கி செல்வதை நோக்கமாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மாவட்ட அலுவலகம், சிறந்த கமநல சேவை நிலையம், சிறந்த விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவிப் பிரிவு, சிறந்த கமநல வங்கி வழிகாட்டல் செயற்திட்டம், சிறந்த மகளிர் நுண் நிதிச் சங்கம், சிறந்த விவசாய அமைப்பு, சிறந்த வீட்டுத்தோட்டம், சிறந்த விவசாயி உள்ளிட்ட 18 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

சிறந்த கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் மற்றும் சிறந்த மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கான ஜனாதிபதி விருதுகளை ஜனாதிபதி வைத்தார்.

கமநல அபிவிருத்தி ஆணையாளர் டபிள்யு.எம்.எம்.பீ.வீரசேகரவினால் இதன்போது கொவிஜன அபிமன் - 2018 ஞாபகார்த்த மலர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது விசேட நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. அமைச்சர் பீ.ஹரிசன், இராஜாங்க அமைச்சர்களான திலிப் வெதஆரச்சி, வசந்த அலுவிகாரே, அமீர் அலி ஆகியோரும் மேல் மாகாண விவசாய அமைச்சர் காமினி திலக்கசிறி உள்ளிட்ட மாகாண அமைச்சர்களும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் டபிள்யு.எம்.எம்.பீ.வீரசேகர உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.