நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரில் டிராமில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை இந்த தாக்குதலை மேற்கொண்டார் என சந்தேகிக்கப்படும் துருக்கி பிரஜையை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உட்ரெச்ட் நகரில் டிராமில் இடம்பெற்ற தாக்குதலில்  ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

37வயது கொக்மன் டனிஸ் என்ற நபரை தேடிவருவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த நபர் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத நோக்கத்தை எங்களால் கருத்தில்கொள்ளாமலிருக்கமுடியாது என  நெதர்லாந்தின் பயங்கரவாத  எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கான அதிகாரி தெரிவித்துள்ளார்

இந்த தருணம் வரை பல விடயங்கள் தெளிவற்றதாக உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பல பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக குறிப்பிட்டள்ள அந்த அதிகாரி மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ளார்.

தாக்குதலிற்கு பின்னர் பாடசாலைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

விமானநிலையங்கள் புகையிரதநிலையங்களிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.