படகு மூலம் சென்று வாக்காளர்களை சந்திக்கும் ’கங்கா யாத்ரா’ எனும் பிரச்சாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி இன்று தொடங்கினார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில கிழக்கு பகுதி தேர்தல் பொறுப்பாளராக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உத்தரப் பிரதேசத்தின் முதுகெலும்பாகத் திகழும் கங்கை ஆற்றில், ‘கங்கா யாத்ரா’ என்ற பெயரில் படகில் சென்று மக்களிடம் ஆதரவு கேட்கும் வித்தியாசமான தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

3 நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தை, திரிவேணி சங்கமத்தில் இருந்து பிரியங்கா இன்று தொடங்கினார். இதற்காக, அலகாபாத் கங்கை படுகைக்கு சென்ற பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலகாபாத்தில் இருந்து படகு மூலம் வாரணாசி செல்லும் பிரியங்கா காந்தி, சுமார் 100 கிமீ தூரம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 

பயணத்தின்போது, ஒவ்வொரு கிராமத்திலும் படகை நிறுத்தி ஊர் மக்களை சந்தித்து ஓட்டு சேகரிக்க இருக்கிறார். குறிப்பாக, கங்கை நதியை வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் மீனவ மக்கள் மற்றும் ராஜபுத்திர இன மக்களை அவர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அலகாபாத்தில் தொடங்கிய இந்த பயணம் வாரணாசியில் நிறைவடைகிறது. பின்னர், அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.