ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்ட தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “திரிபீடகாபிவந்தனா” வாரத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளில் சமய அனுஷ்டானங்கள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, விகாரைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புனித சின்னங்களை தரிசிப்பதற்கான வாய்ப்பும் பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் சில விகாரைகளில் புனித சின்ன வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு எஹெலியகொட ஸ்ரீ விமலாராம விகாரையில் இடம்பெறும் புனித சின்ன வழிபாட்டிற்காக கொழும்பு மாளிகாகந்த மகாபோதி விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புனித சின்னங்களை கொண்டு செல்லுதல் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவின் தலைமையில் இன்று (18) இடம்பெற்றது.

இற்றைக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த புனித சின்னங்கள் கொழும்பு மாளிகாகந்த மகாபோதி விகாரையின் பொறுப்பில் காணப்படுகின்றன.

இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய பாணகல உபதிஸ்ஸ நாயக்க தேரரின் ஆசிர்வாதத்தோடு இந்த புனித சின்னங்களை எஹெலியகொட ஸ்ரீ விமலாராம விகாரைக்கு கொண்டு செல்லும் நிகழ்வு ஆரம்பமானது.

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களும் எஹெலியகொட விமலாராம  விகாரையில் இந்த புனித சின்னங்களை வழிபடுவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.

மேலும் “திரிபீடகாபிவந்தனா” வாரத்திற்காக எதிர்வரும் தினங்களில் பொலன்னறுவை, அம்பாறை, குருணாகல், ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் புனித சின்ன வழிபாட்டு நிகழ்வுகள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.