(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
இலங்கை தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று குறித்த பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளின் பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி பாதிரியார் எஸ்.ஜே. இம்மானுவேல் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை கால அட்டவணையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கும் வகையில் சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி பாதிரியார் எஸ்.ஜே. இம்மானுவேல் ஆகியோர் இன்று ஜெனிவா வளாகத்தில் பிரிட்டன் தலைமையிலான இலங்கை பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர். உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி சுரேன் சுரேந்திரனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

இதன்போதே மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை குறித்த 24 நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.