(ஜெனிவாவிலிருந்து எஸ் ஸ்ரீகஜன்)

இலங்கை தொடர்பாக பிரிட்டன், ஜேர்மன் ஆகிய நாடுகளினால்  ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் மேலும் சில உள்ளடக்கங்களை முன்வைக்க வேண்டுமென இலங்கை தரப்பில்  கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன. 

அதாவது  தற்போது   முன்வைக்கப்பட்டுள்ள 40/1 என்ற பிரேரணையில்  நான்கு செயற்பாட்டு பந்திகள்  உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் பொதுவாக இலங்கை அரசாங்கம் செய்யவேண்டிய  செயற்பாடுகள் தொடர்பில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் நல்லிணக்கம்  மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில்   அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய தீர்க்கமான நடவடிக்கைகள் குறித்தும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அந்த பிரேரணை தற்போது மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வியாழக்கிழமை  பிரேரணை நிறைவேற்றப்படவிருக்கிறது. 

இந்நிலையில்  இலங்கை அரசாங்கமானது கடந்த நான்குவருட காலத்தில் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இந்த பிரேரணையில்  சில மேலதிக உள்ளடக்கங்கள் இடம்பெறவேண்டுமென இலங்கை தரப்பில் கோரிக்கைவிடப்படவுள்ளது.