நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பான, 15 லட்சம் வீடியோக்களை, 24 மணி நேரத்தில் முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளது. 

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த  வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். 

இந்த  சம்பவம் தொடர்பாக பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான அவுஸ்திரேலிய நபர்  கொலை குற்றம் சாட்டப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, தான் நடத்திய தாக்குதலை கமரா மூலம் பதிவு செய்ததோடு, அதை நேரலையாக தனது முகநூலில் ஒளிபரப்பு செய்தார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காட்சிகள் உலகம் முழுவதும் பரவியது.

இதையடுத்து இந்த காணொளி பகிர்வும் சட்டத்திற்கு எதிரான மிகப்பெரிய வன்முறை என்றும், அதனை முகநூல் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார். அதன்படி சமூக வலைத்தளங்களில் உள்ள காணொளிகள் நீக்கப்பட்டன.

இந் நிலையில் முகநூல் நிறுவனம் குறித்த காணொளி பகிரப்படுவதை தடுக்க தனியாக ஒரு குழுவை நியமித்து, சிறந்த தொழில்நுட்பத்துடன் காணொளி முழுவதையும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் 1.5 மில்லியன் (15 லட்சம்) காணொளிகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் முகநூல் ஊழியர்கள் தொடர்ந்து காணொளிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.