(நமது சென்னை நிருபர்)

இலங்கைக்கான தென்னியத் தூதுவர் திரு.வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவர்களை, இந்தியாவின் மிக முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்றான மதுரை, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் திரு. சசி ஆனந்த் ஸ்ரீதரன் இன்று  சந்தித்தார். சென்னை, ஹாரிங்டன் சாலையில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

மேற்படி சந்திப்பின்போது, இலங்கையில் நிலவும் உயர்கல்விக்கான தேவைகள் பற்றியும் அவற்றைப் பூர்த்தி செய்வதில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் வகிபாகம் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் சித்தி பெற்றும், ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியைத் தவறவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும், அவர்களது உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்க, தமிழ்நாடு போன்ற அண்டை நாடுகளில் இயங்கும் தகுதிவாய்ந்த கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றும் திரு.வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இச்சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், கல்வித் திறமை இருந்தபோதும் குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்களால் உயர்கல்வியைத் தவறவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறித்து கவலை தெரிவித்த திரு.வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் இந்த நிலை தொடரக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அதற்கிணங்க, இலங்கை அரசின் அனுமதியுடன், இலங்கையில் இயங்கும் குறிப்பிட்ட சில பாடசாலைகளுடன் இணைந்து, இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி வழங்க தமது பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாக, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் திரு. சசி ஆனந்த் ஸ்ரீதரன் தெரிவித்தார். உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியெய்தும் மாணவர்களுக்கும், ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கும் அவர்களது திறன் அடிப்படையில் கல்விக் கட்டணத்தின் 75 சதவீதம் வரை புலமைப்பரிசிலாக வழங்க, தேவையான ஒழுங்குகளைச் செய்வதாகவும் திரு சசி ஆனந்த் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இதை வரவேற்ற திரு.வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, அதற்குத் தேவையான ஒழுங்குகளைத் தனது மேற்பார்வையில் செய்து தருவதற்கு தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.