கென்யாவில் பல்வேறு துறைகளில் பணிபரியும் இலங்கையர்களாகிய உங்களை சந்திக்க கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் கென்ய நாட்டிற்கு ஆற்றும் சேவைகளைப் போன்றே இலங்கைக்கு பெற்றுத்தருகின்ற கௌரவத்தையும் நான் பாராட்டுகிறேன்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் குழந்தைகளினால் அரங்கேற்றப்பட்ட கலாசார அம்சத்தை காணும்போது எனக்கு எனது வீட்டின் ஞாபகம் வந்தது. எனது பேரப்பிள்ளைகளின் ஞாபகமே வருகின்றன. எனக்கு இரண்டு பேத்திகளும் ஒரு பேரனும் இருக்கின்றார்கள். இந்த மழலை செல்வங்கள் முன்வைத்த கலாசார நிகழ்ச்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

 நீங்கள் இணையத்தளத்தின் ஊடாக உலகத்தை காண்பவர்களாகவும் உங்களது எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பவர்களாகவும் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற துயர சம்பவம் தொடர்பில் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த சம்பவத்தினால் இதுவரையில் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். அந்த சம்பவத்தின் முதலாவது குற்றவாளியாவும் இரண்டாவது குற்றவாளியாகவும் இருப்பது சமூக ஊடகங்கள் என்று நீங்கள் கண்டிருப்பீர்கள். 

இது தொடர்பில் விசாரிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப சமூக ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். சமூக ஊடகங்களை பயன்படுத்தி அவ்வாறான சம்பவங்களுக்கு தூண்டும் வரையில் அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஏன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதனை பற்றி விசாரிப்பதற்கே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையில் என்ன நடந்தது என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கும். கண்டியில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான மோதலை உருவாக்குவதற்கு சமூக ஊடகங்களே பிரதான காரணியாக அமைந்திருந்தன. 

அந்த சமயத்தில் ஒரு வாரத்திற்கு இலங்கையில் சமூக ஊடகங்களை நான் தடை செய்தேன். நாட்டில் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றிப் பேசுபவர்கள் அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்நிய நாட்டு சக்திகளாக இயங்கும் அரசார்பற்ற நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன. இறுதியில் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தமையால் தான் கண்டியில் அமைதியான சூழ்நிலையை நிலைநாட்ட முடிந்தது என்று அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அண்மையில் சிங்கப்பூர் சமூக ஊடகமொன்றினால் இடம்பெற்ற பாரிய சம்பவமொன்றை விசாரிப்பதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமித்து சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளை வரவழைத்து விசாரனை மேற்கொண்டது. இலங்கையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு நீங்கள் தான் குற்றவாளிகள் என்று சமூக ஊடகங்களிடம் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இலங்கை அரசாங்கம் ஒரு வார காலத்திற்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததால் தான் அந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்கள். 

அனைத்து விடயங்களிலும் நன்மை மற்றும் தீமை உண்டு. மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தொலைபேசி மற்றும் இணையத்தளத்தை உருவாக்கிய விஞ்ஞானி அதை நல்ல எண்ணத்தைக்கொண்டு உருவாக்கியிருந்தாலும் ஆன்மீக ரீதியாக பின்னடைந்துள்ள உலகத்தில் அவற்றை எந்தளவு தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தற்கொலை செய்துகொள்வோர் பட்டியலில் எமது நாடு முன்னேறியுள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு சமூக ஊடகங்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளன. அண்மைக் காலங்களாக சிறு வயதையுடையவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் நிலை அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் மன அழுத்தமும் உளவியல் பிரச்சினைகளும் அதற்கான காரணியாக அமைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டை முன்னேற்றுவது தொடர்பில் நாம் அனைவரும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நமது தாயகம் சமாதானத்தை அடைந்து பத்தாண்டுகளாகின்றன. எதிர்வரும் மே மாதம் சமாதானத்தின் பத்தாண்டு விழாவினை விமரிசையாக கொண்டாடுவதற்கு எண்ணியுள்ளளோம். 

நாட்டுக்கு பதவிகளை நிரப்புவதற்கு ஆட்கள் தேவையில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கே ஆட்கள் தேவை. பல சந்தர்ப்பங்களில் பதவிக்கு தகுதியான மனிதர்களை தேடுகிறோம். அவ்வாறான மனிதர்களை கண்டறிந்த பின்னர் அவர்களுக்கு பதவியை வழங்கினாலும் சுயமாக பிரச்சினைகளுக்கு  தீர்வளிக்கும் ஆற்றல் அவர்களுக்கில்லை. அதற்கொரு சிறப்பான குழு இருக்க வேண்டும்.

உலகில் வளர்ச்சியடைந்த அனைத்து நாடுகளும் தனிநபர் அல்லது இரண்டு, மூன்று பேரின் திறமைகளினால் முன்னேற்றமடையவில்லை. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய குழுக்கள் மற்றும் மக்களினாலேயே அந்நாடுகள் முன்னேற்றமடைந்துள்ளன. எவ்வகையான பிரச்சினைகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் உன்னத எண்ணத்துடன் எமது நாட்டை மீள கட்டியெழுப்ப எங்களால் முடியுமாக இருக்க வேண்டும். 

நமது தாயகத்தின் வளர்ச்சிக்காக உங்களால் மேற்கொள்ளப்படும் இந்த அர்ப்பணிப்புகள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே எமது எண்ணமாக அமைய வேண்டும். உங்களைப் போன்றவர்கள் கென்யாவுக்கு வருகை தந்து நீங்கள் முன்வைத்த நிகழ்ச்சிகளை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். 

வியாபாரத் துறையிலும் நீங்கள் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளீர்கள். நீண்ட காலமாக நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள்.இலங்கையர்கள் என்ற வகையில் நீங்கள் இங்கு பணிபுரிவது நாட்டுக்கு மகத்தான கௌரவமாகும். உங்கள் அனைவரையும் நான் ஆசிர்வதிக்கின்றேன். 

எமது தாயகத்தை உலகில் சிறந்த நாடாக மாற்றியமைப்பதற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். பொருளாதார ரீதியாக வளமான நாடாக மாற்றுவதற்கும் ஒழுக்கமான பிரஜைகள் வாழும் நாடாக மாற்றுவதற்கும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் உங்களுக்கு சக்தி கிடைக்க வேண்டும். சகல இனங்களும் ஒன்றுசேர்ந்து நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல கூட்டுப்பொறுப்பினை ஏற்க வேண்டும். உங்களது அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார்.